அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் ஆளும் கட்சியினர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை துணையோடு அத்து மீறுகின்றனர் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக திமுக கூட்டணி கட்சியினர் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில், ஆளும் கட்சியினர் அதிகார தலையீடு அதிகமாக இருந்தது. திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கடுமையாக போராடி எங்களுக்கு உரிய வெற்றியை அறிவிக்க செய்தோம். மொத்தம் உள்ள 19 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளில் 9 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு தேவையான வெற்றி பெற்ற கடைசி 10வது திமுக வேட்பாளரின் வெற்றியை எங்கள் கண்முன்பாகவே அநியாயமாக மாற்றி அறிவிக்கிறார்கள். மறுவாக்கு எண்ணிக்கைக்கான மனுவினை பெற்றுக்கொண்டனர். ஆனால் அதற்கு உரிய சான்றுகளை தர மறுத்து காலதாமதம் செய்தனர். கடைசியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கான மனுவினை ஏற்கவே மறுத்துவிட்டனர்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி முகவர்களை ஆளும் கட்சியினரும், அதன் கூட்டணி கட்சியினரும் காவல்துறை துணையோடு அடித்து விரட்டுகின்றனர். மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சியினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் இதுபோன்ற அத்து மீறலில் ஈடுபடுவ்தால் திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர் இதுதொடர்பாக அரியலூரில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் முறையிட்டார். அங்கு உரிய பதில் கிடைக்காததால் நீதி வேண்டும் என்று போராடிய அவரை போலீசார் கைது செய்தனர்.
வாக்கு எண்ணிக்கை முடிந்து உடனே அறிவிக்க வேண்டிய முடிவுகளைக் கூட அறிவிக்காமல், வேண்டுமென்றே காலதாமம் செய்து அதிகாலை வரை காக்க வைத்தனர். ஆளும் கட்சியினர் அதிகார பலத்தோடு விரட்டும்போது வேறு வழியில்லாமல் வெளியேறினோம் என்கிறார் திமுகவின் சுபா சந்திரசேகர்.