Skip to main content

கொளுத்தும் வெயில்! தனது சிலையை வைத்து பிரச்சாரம் செய்த வேட்பாளர்! (வீடியோ)

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வாக்காளர்களைக் கவரும் விதமாக பல புதிய உத்திகளை வேட்பாளர்கள் கையாளுகின்றனர். எல்லாமே தேர்தல் நேர கூத்துகளாக முடிந்து போகின்றன. அந்த வகையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கையாண்ட உத்தி விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறது. 
 

TMC


திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் உறவினர் அபிசேக் பானர்ஜி. இவர் டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேற்கு வங்கம் மாநிலத்தில் தற்போது வெயில் கொளுத்தி வருவதால், இவரால் எல்லா பகுதிகளுக்கும் செல்ல முடிவதில்லை. இதனால், தன்னைப் போலவே சிலை ஒன்றைச் செய்து பிரச்சார வாகனத்தில் அதை அனுப்பி வைக்கிறார். 
 

கைகளை வணக்கத்திற்காக குவித்தபடி, கழுத்து நிறைய மாலை அணிந்திருக்கும் இந்த சிலையை காரில் ஏற்றியிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள், அபிசேக் பானர்ஜிக்கு வாக்கு கேட்டு கோஷம் எழுப்புகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவிட்டு, “ஓட்டு கேட்கக்கூட மக்களைச் சந்திக்காத இவர்களா, நாளை வெற்றி பெற்ற பிறகு பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கப் போகிறார்கள்” என கண்டித்துள்ளது. வேறு சிலரோ, அவருக்கும் வியர்க்கும்ல என்ற பாணியில் கிண்டலான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 
 

தமிழ்நாட்டில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை சவப்பெட்டியில் வைத்து, அதில் தேசியக்கொடியைப் போர்த்தியது போன்ற சிலையை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினர் அ.தி.மு.க.வினர். அவர்களுக்கே டஃப்பு கொடுக்கும் விதமாக இருக்கிறது திரிணாமூல் காங்கிரஸின் அபிசேக் பானர்ஜி கையாண்ட உத்தி.
 

சார்ந்த செய்திகள்