தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் பேராயர் ஜவஹர். இவர் தனது ஆதரவாளர்கள் 500 பேருடன், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறியதாவது, “ மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு நன்றி.
சமஸ்கிருதம்தான் இந்தியர்களை ஒருங்கிணைக்கும் மொழி எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே பேசி வருகிற ஒரு மொழி எப்படி இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும்? அதே போல லாபம் வழங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பொதுத்துறை எனும் பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நரேந்திர மோடி அறுத்துக்கொண்டிருக்கிறார். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். நிதித்துறை குறித்து தெரியாத நபர் நிதி மந்திரியாக (நிர்மலா சீதாராமன்) உள்ளார்” எனக் கூறினார்.