திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மா.செவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர்.ராமச்சந்திரன் தலைமையில், திருவண்ணாமலை நகரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 13ந்தேதி மதியம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர். அப்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நிர்வாகிகள் பேசும்போது, கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஒரு நிர்வாகி, சமீபத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. 3 டெண்டர்களில் 2 டெண்டர் மட்டும்மே நம் கட்சிக்காரர் எடுத்துள்ளார், மற்றொரு டெண்டர் திமுக நிர்வாகிக்கு சென்றுள்ளது, இது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளனர். "கட்சிக்காரனுக்கு டெண்டர் கிடைக்காமல் எதிர்கட்சிக்காரனுக்கு டெண்டர் கிடைத்தால் எப்படி ?. இப்படிப்பட்ட கட்சிக்கு நாங்கள் தேர்தல் வேலை செய்ய வேண்டும்மா" என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு, இரண்டு, மூன்று கோஷ்டிகளாக பிரிந்து அமைச்சர் முன்னிலையில் நாற்காலிகளை தூக்கி வீசி சண்டையிட்டுக்கொண்டுள்ளனர். நீண்ட நேர சண்டைக்கு பின் அவர்களை சமாதானம் செய்த அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன். சேர்மன், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு யார், யார் என்பது தேர்வு செய்யப்படும். 'முதலில் யாருக்கு எந்த வார்டு வேண்டும் என கட்சி தலைமையில் பணம் கட்டுங்கள் மற்றவற்றை பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனப்பேசி அவசரம் அவசரமாக கூட்டத்தை முடித்துக்கொண்டு' சென்றுள்ளார்.