"குடிசை இல்லா நாடாக உருவாக்குவோம்" இதுதான் தமிழகத் தேர்தலில் பிரதான வாக்குறுதியாக இருக்கிறது, ஆனால் குடிசையில் வாழும் ஒருவரையே வேட்பாளராகக் களமிறக்கியிருப்பது பலரையும் உற்றுக் கவனிக்கச் செய்திருக்கிறது.
அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொழுதே எத்தனை கோடி உங்களுக்குச் சொத்து இருக்கிறது? உங்களுக்குப் பின்புலம் என்ன? எத்தனை கோடி தேர்தலுக்காகச் செலவு செய்வீர்கள்? என்பதுதான் பிரதான கேள்வியாக இருக்கும். அதன்படியே பல வேட்பாளர்களும் களமிறக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மத்தியில், கீற்றுகூட மாற்ற முடியாத குடிசையில் வாழும் ஒருவர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருப்பதுதான் அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் ஒன்றியம் காடுவாகுடி கிராமத்தில் கண்ணு, தங்கம் தம்பதிக்கு மகனாக சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்தவர் மாரிமுத்து. விவசாயத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த இவரையே அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராகக் களம் இறக்கியுள்ளது.
திருத்துறைப்பூண்டி தொகுதிக்காக வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அவரின் சொத்து மதிப்பு, பலரையும் அவரது பக்கம் திரும்பி பார்க்கச் செய்துள்ளது. அவருக்கு 75 சென்ட் நிலம் உள்ளது. அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும், மாரிமுத்துவின் மனைவியும், அவரது தாயார் கூலி வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தையும் வைத்துத்தான் அவர்களின் குடும்பத்தில் ஜீவனம் நடக்கிறது.
மாரிமுத்துவின் மனைவி ஜெயசுதா, “எங்களுக்குன்னு பெருசா சொத்து கிடையாது. இந்த குடுசை வீடும், மாமனார் கஷ்டபட்டு வாங்கிவச்சிருந்த இரண்டுமா நிலமும் தான். அந்த நிலத்துல கிடைக்கிறதவச்சி இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்கிறோம். நானும் என்னோட மாமியாரும் கூலி வேலைக்குப் போய்தான் தினசரி குடும்பத்தை நகர்த்துறோம். வீட்டுக்காரர் மக்களுக்காக ஓடிடுவார். கட்சிக்காக காலை இரவு பாராமல் போயிடுவார். அவரு கட்சி, மக்கள், போராட்டம்னு ஓடுவதைக் கண்டு வேதனைப்பட்டிருக்கோம். ஆனால், இந்த ஏழையையும் இந்தத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது நாங்க இவ்வளவு நாள் பட்ட வேதனை எல்லாம் சுக்குநூறாக கலைஞ்சிடுச்சு. எங்க தொகுதி மக்கள் அவரோட உழைப்புக்காகவே எம்.எல்.ஏ. ஆக்குவார்கள். அவருடைய உழைப்பு வீன்போகாது. மக்கள் நிச்சயம் ஜெயிக்க வைப்பாங்க" என்கிறார் வெள்ளந்தியாக.
மாரிமுத்து, “எதற்குத் தோழர் நமக்குச் சொத்து. மக்களும், கட்சியுமே நமது சொத்துதான். பாவம் இந்த மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தவிக்கிறாங்க. அவங்களுக்கு நிரந்தர வீடு கட்ட செய்யவேண்டும். விவசாயிகளுக்கான, தொழிலாளர்களுக்கான குரலாக சட்டமன்றத்தில் ஒலிப்பேன்” என்கிறார். திருத்துறைப்பூண்டி தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் பண பலம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.