மதுவிலக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அக்டோபர் 2ஆம் தேதி நடத்தும் மாநாட்டில் அ.தி.மு.கவினரும் பங்கேற்கலாம் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். திருமாவளவன் அ.தி.மு.கவிற்கு அழைப்பு விடுத்திருந்தது, திருமாவளவன் தி.மு.கவில் இருந்து பிரிந்து அ.தி.மு.கவோடு கூட்டணி வைக்கப்போகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்ததில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளானது. இதற்கு கூட்டணியைச் சார்ந்தவர்கள், கூட்டணியைச் சாராதவர்கள் என பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தலுக்காக மது ஒழிப்பு மாநாட்டை நடத்தினால் அதை விட அசிங்கம் எதுவும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (14-09-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “மது ஒழிப்பில் எல்லோருக்கும் உடன்பாடு இருக்கிறது. தி.மு.க 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மதுவை ஒழிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதே போல், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறார்கள். மது ஒழிப்பில் திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளுக்கும் உடன்பாடு உள்ளது. பாதிக்கப்படுகிற பெண்களின் கண்ணீரையும், வலியையும் பற்றி பேசாமல், கூட்டணி கணக்குகள் பற்றி பேசி, எல்லோரும் இந்த விஷயத்தை திசை திருப்புகிறார்கள்.
கண்ணீர் விடுகிற தாய்மார்களின் மதித்து அவர்களின் உணர்வை வெளிப்படுத்துவதற்காக தான் இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம். இந்த மாநாட்டில், எந்தவித தேர்தல் கூட்டணி கணக்கே இல்லை. தேர்தலுக்காக இந்த மாநாட்டை நடத்தினால், அதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை. நான் அந்த அடிப்படையில், இந்த மாநாட்டை நடத்தவில்லை. கள்ளக்குறிச்சிக்கு சென்று கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட தாய்மார்கள் இதற்கெல்லாம் போராட்டம் நடத்த மாட்டீர்களா என்று கேட்டார்கள். அதன் பிறகு, நான் உடனடியாக இந்த மாநாட்டை அறிவித்தேன். இது 100 விழுக்காடு மது ஒழிப்பிற்கான அரசியலை மட்டும் முன்னிறுத்திருகிறோம். இதில், 0.1% கூட தேர்தல் கூட்டணி கணக்கு இல்லை” என்று தெரிவித்தார்.