
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.
இன்று (12.03.2021) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் நெல்லையில், பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் பொன்.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர். இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நல்ல நேரம் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ததாக நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.