சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபட பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார். தன்னை அதிமுக பொதுச்செயலாளராகத் தொடர்ந்து அவர் அடையாளப்படுத்தி வந்தாலும், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மறுப்பு தெரிவித்துவருகின்றனர். அதே நேரத்தில் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டு ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்ற குரலும் அதிமுக வட்டாரத்தில் ஒலிக்கிறது.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே சசிகலாவை விமர்சித்து வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''எங்களுடைய அதிமுக ஆட்சியில் ஆளுநர் தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு சில ஆய்வுகளை மேற்கொண்டதற்கு ஆளுநர் மீது விமர்சனங்கள் எழுப்பி, அவர் போகின்ற இடத்தில் எல்லாம் கறுப்புக்கொடி காட்டி அவமதித்தவர்கள் திமுகவினர். தற்பொழுது ஆளுநர் அதிகாரத்தைச் செலுத்தும்பொழுது முன்பு கூச்சலிட்டவர்கள் இப்பொழுது ஏன் பம்மிக் கொண்டு பயந்துகொண்டு கைக்கட்டி நிற்க வேண்டும். இது எப்படிப்பட்ட இரட்டை நிலை.
சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவது அதிமுகவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. அதேபோல் தலைமைக்கழகத்தில் கூட்டம் போட்டு சசிகலாவைச் சார்ந்தவர்களுடன் யார் தொடர்பு வைத்தாலும் நீக்க மாவட்டச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்துவிட்டோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் போட்டு சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். இதுதான் நேற்றைய நிலை, இன்றைய நிலை, நாளைய நிலை'' என்றார்.
டிடிவி தினகரன் இல்ல விழாவில் சசிகலா கலந்துகொண்ட நிலையில் ஓபிஎஸ் சகோதரரும் கலந்துகொண்டது குறித்த கேள்விக்கு ''எல்லாவற்றையும் கட்சி பார்த்துக் கொண்டிருக்கிறது'' என்றார்.