உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள் அங்கு ஊரடங்கு காரணமாகத் தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இது மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து இன்று மாலை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை தொடர்பு கொண்டு பேசிய தமிமுன் அன்சாரி, காசி கோயிலுக்குச் சென்ற பக்தர்கள், தமிழகம் வர 3 பேருந்துகளில் தயார் நிலையில் இருப்பதாகவும், தமிழக அரசு இது தொடர்பாக உத்திரப்பிரதேச அரசிடம் பேசினால் உரிய அனுமதி சீட்டு பெற்று அவர்கள் வர இயலும் என்றும் இதற்குத் தாங்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தனது கவனத்துக்கு இதைக் கொண்டு வந்ததற்கு நன்றி சொன்ன சேவூர் ராமச்சந்திரன், இதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.