தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்ட, திமுகவின் துணை பொதுச் செயலாளரான அந்தியூர் ப.செல்வராசு, இன்று (11ஆம் தேதி) நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர், “இது என்னுடைய கன்னிப் பேச்சு. இந்தியத் திருநாட்டின் வரைபடத்தில் இல்லாத ஒரு குக்கிராமத்தில் பிறந்த என்னை, அரசியல் உலகிற்கு அறிமுகப்படுத்திய என் உயிரினும் மேலான கலைஞருக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அவையில் பேசுவதற்கு வாய்ப்பளித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களிடேயே பேதங்கள் இருக்கமுடியாது; பிறப்பால் அனைவரும் சமமானவர்கள். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற நிலை இல்லை என்று தமிழகம் முழுவதும் தன்னுடைய பகுத்தறிவு பிரச்சாரத்தை நடத்திய தந்தை பெரியாரின் வழியிலும் பேரறிஞர் அண்ணாவின் வழியிலும் நடந்த சமூகப் புரட்சியின் காரணமாகத்தான் இந்த மாபெரும் சபையில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
2021– 22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை, அறிவிப்புகளை செய்திருக்கின்றீர்கள். ஆனால், அந்தத் திட்டங்கள் முழுவதும் பெரும் முதலாளிகளுக்கே சாதகமான திட்டங்களாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதில், நான் சில கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன். பிரதமர், சுகாதாரத் துறையின் கீழ் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், அந்தத் திட்டம் இதுநாள் வரைக்கும் நிறைவேற்றப்படவில்லை. கட்டுமானப் பணிகள் துவக்கப்படவில்லை, அதற்குண்டான நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் திருப்பூர் நகரமென்பது, நெசவாள பெருமக்கள் மற்றும் பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய மிகப்பெரிய ஏற்றுமதி ஜவுளி நிறுவனத்தைக் கொண்ட நகரமாகும். இந்த நகரத்தில் பெரும் தொழில்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்நிய செலாவணியை ஈட்டித்தரக்கூடிய ஒரு பெரும் நகரமாகும். அந்த நகரத்தில் இருக்கக்கூடிய தொழிலுக்குண்டான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.
ஈரோடு, சென்னிமலை, குமாரபாளையம், எடப்பாடி, திருச்செங்கோடு போன்ற நகரங்களில் லட்சக்கணக்கான நெசவாளர்கள், தொழிலாளர்கள் வாழ்கின்ற பகுதி ஆகும். இவர்கள் பயன்பெறுகின்ற வகையில் ஈரோட்டில் இ.எஸ்.ஐ மருத்துவமனை துவங்கப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை மக்கள் விரோதச் செயலாகும். எல்.ஐ.சி. என்பது ஏதோ ஒரு காப்பீடு நிறுவனம் அல்ல. அதை லாபம் ஈட்டும் ஒரு நிறுவனம் என்று பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். எல்.ஐ.சி. என்பது இந்தியர்களின் நம்பிக்கை. நீங்கள் விற்பது அந்த நிறுவனத்தின் கோடிக்கணக்கான வியாபாரத்தையோ அல்லது அந்த நிறுவனத்தின் பலகோடி மதிப்புள்ள அசையா சொத்துகளையோ அல்ல, மக்களின் நம்பிக்கையை. ஆகவே இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை மூலம் மாநில மொழிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து அவற்றை அழிக்கும் செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம். அந்த கொள்கையை தமிழகம் முழுவதுமாக நிராகரிக்கிறது. அதற்கு பதிலாய் பள்ளிக் கட்டணங்களை தரம் உயர்த்தி புதிய கல்விகளை உருவாக்கிட மாநில அரசுகளுக்கான நிதியை ஒதுக்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பட்டியல் இனத்து மாணவர்களுக்கென 'போஸ்ட்வேக்' கல்வி உதவித் தொகையை உயர்த்துவதாகக் கூறி 6 வருடங்களுக்கு சுமார் ரூ.35,02,019 கோடி ஒதுக்கியுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால், உண்மையில் தமிழகத்திற்கு பல வருடங்களாக பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவில்லை.
தமிழக அரசோ, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து நிதி வரவில்லை என்று கூறுகிறது. முதலில் கல்வி உதவித் தொகையினை பட்டியலின மாணவர்களுக்கு தந்திட வேண்டுகிறேன். அந்த நிலுவைத் தொகை ரூ.2 ஆயிரத்து 61 கோடி என்பதை இந்த அவையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அசாமிலும், மேற்கு வங்காளத்திலும் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் நலனுக்காக ஆயிரம் கோடி ரூயாய் ஒதுக்கீடு செய்திருக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டில் வால்பாறை, ஊட்டி, நீலகிரி போன்ற மலைப்பிரதேசங்களில் வேலை செய்கின்ற லட்சக்கணக்கான தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அசாமிலும், மேற்கு வங்காளத்திலும் உங்களுக்குத் தேர்தல் வருகின்ற இந்த நேரத்தில், வெற்றி வாய்ப்பை உறுதி செய்வதாக நினைத்துக் கொண்டு நீங்கள் நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றீர்கள். ஆனால் தமிழகத்தில் அந்த வாய்ப்பு இல்லையென்று நீங்கள் புறக்கணித்திருக்கின்றீர்கள் என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொள்கின்றேன்.
ஜி.எஸ்.டி-ல் மாநில அரசுகளின் பங்கினை இதுவரை தராமல் மாநில அரசுகள் கடன்வாங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருப்பது, ஜி.எஸ்.டி. சட்டத்திற்கு எதிரானது. அந்த கடனுக்குரிய வட்டியை யார் கட்டுவார்கள். எனவே தமிழக அரசுக்குத் தர வேண்டிய பங்கினை உடனே கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்திலிருந்து கூட்டாட்சித் தத்துவத்திற்கு குழிபறித்து வருகிறது. மாநில அரசுகளின் வசமிருந்த அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்து வருகின்றீர்கள். ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் மூலம் மாநில அரசுகள் வரி நிர்ணயம் செய்யும் உரிமையைப் பறித்துள்ளீர்கள். இரண்டாவதாக விவசாயச் சட்டங்களை நிறைவேற்றி மாநில அரசுகளிடமிருந்து கொள்முதல் செய்யும் உரிமையைப் பறித்துள்ளீர்கள். மூன்றாவதாக இந்த நிதிநிலை அறிக்கையில் மாநில அரசுகள் மின்சாரம் விநியோகம் செய்யும் உரிமையையும் பறிக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் அனைவருக்கும் உண்டான பொது விநியோகத் திட்டம் ‘யூனிவர்சல் பப்பளிக் டிஸ்டிபூட்டர் சிஸ்டம்’ நடைமுறையில் இருந்து வருகிறது.
கலைஞர், தனது காலத்தில் ஒருவேளை சோறாவது நிச்சயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். கேரள மாநிலமும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்கள்தான் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்களைப் பெற முடியும். நீங்கள் நிறைவேற்றியுள்ள இந்த புதிய விநியோகச் சட்டங்கள் தமிழகத்தில் மிக உன்னதமான பொதுவிநியோகத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்திவிடும். எனவே கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளுக்கு கேடுவிளைவிக்க நினைக்கும் இந்த விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
சென்னை முதல் சேலம் வரை 8 வழிச் சாலை திட்டத்தைக் கொண்டு வந்துள்ளீர்கள். பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் விளை நிலங்களை இந்தத் திட்டத்திற்காகக் கையகப்படுத்தியுள்ளீர்கள். விவசாயிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கின்றீர்கள். ஏற்கனவே, சென்னை முதல் சேலம் வரை உளுந்தூர்பேட்டை வழியாக தேசிய நெடுஞ்சாலை உள்ளது. பெரியளவில் ஏற்கனவே சாலை வசதியை மேம்பாடு செய்ய இடம் கையகப்படுத்துள்ளீர்கள். சில இடங்களில் பாலமும் கட்டியுள்ளீர்கள். அதை விட்டுவிட்டு யாருக்காகவோ, எதற்காகவோ இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக இருக்கிறீர்கள்? ஆகவே அந்த திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
பெட்ரோல் விலை நாளுக்கு நாள் விஷம்போல் ஏறிவருகிறது. பெட்ரோலை இந்தியாவிலுள்ள அனைத்து மக்களும் பயன்படுத்துகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி பெட்ரோல் விலையைக் குறைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சமையல் எரிவாயு பயன்பாட்டை சாதாரண ஏழை எளிய மக்களும் பயன்படுத்துகின்றார்கள். இதனுடைய விலையும் குறைத்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
குடிநீர் விநியோகம், இந்த நிதிநிலை அறிக்கையில் சுகாதார துறையின் கீழ் சேத்துள்ளீர்கள். இந்தத் திட்டங்கள் மாநில உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
அண்ணா 1962ஆம் ஆண்டு இந்த அவையில் நாட்டு மக்களுக்காகப் பணியாற்றி இருக்கிறார். அவர் ஒரு கருத்தைச் சொல்வார் ‘தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது’ என்று. அதேபோல்தான் இன்றைய நடைமுறையில் இருந்துகொண்டு இருக்கிறது. ஆகவே நல்ல திட்டங்களை தமிழகத்திற்குத் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" எனப் பேசினார்.