திண்டுக்கல் மாவட்டம் ஒடுக்கம் பகுதியில், 14-ந் தேதி புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. 25 ஆயிரம் பேர் அமர்வதற்கான கொட்டகையும் போடப்பட்டிருந்தது.
முகப்பில் காவிரி காப்பாளர் என்ற அடை மொழியுடன், முதல்வர் விவசாயி எடப்பாடியின் பெரிய படமும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். படம் ஒரு ஓரமாகவும் இடம்பெற்றிருந்தன. குப்பைக் கிடங்கு இருந்த இடத்தைத்தான், மருத்துவக் கல்லூரி கட்டிக்கொள்ள ஒதுக்கியுள்ளது மாநகராட்சி. ஏற்கனவே கொரோனா பீதியில் மக்கள் கூட்டம் சேர்வதைத் தவிர்த்து வரும் நிலையில், இந்தக் காரணமும் சேர்ந்துகொள்ள பத்தாயிரம் பேரைத் திரட்டவே பெரும்பாடுபட்டார்கள் ர.ர.க்கள்.
விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் பலர், கைகளைக் கழுவாமல் நுழைந்தனர். பலருக்கு இருமல், தும்மல் பிரச்சனைகள் இருந்தும் அலட்சியத்துடன் அனுமதித்து விட்டார்கள். கொரோனா பீதி சமயத்தில் இதெல்லாம் தேவையா? சுகாதாரத்துறை அதிகாரிகள் நொந்துகொண்டார்கள்.
பூமிபூஜை உள்ளிட்ட சம்பிரதாயங்களை முடித்துவிட்டு மேடையேறிய முதல்வர் எடப்பாடி, "உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலை நவீனப்படுத்த ரூ.58 கோடி ஒதுக்கி அடிப்படை வசதிகளை மேம்படுத்தி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இணையாக மாற்றுவோம்'’என்று உறுதியளித்தார்.
பழனி முருகன் மீதான முதல்வரின் திடீர் பாசம் பற்றி விசாரித்த போது, “தீவிர முருக பக்தரான எடப்பாடியின் மனைவி பழனிக்கு அடிக்கடி செல்வார். அப்படி சென்றபோது, அங்கிருக்கும் குறைகளை அவரிடம் சொன்ன ஐயர்கள், "இதைச் சரி செய்தால் செவ்வாய்க்கு உகந்தவரான முருகப்பெருமான், உங்கள் கணவரின் ஆட்சி அதிகாரத்தைக் காத்தருள்வார்' என்று கூறியதன் விளைவுதான் அறிவிப்பாகி இருக்கிறது''’என்கின்றனர்.