தமிழ்நாடு அரசு சயனைடு சப்ளை செய்கிறது என முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் குப்புசாமி மற்றும் விவேக் என்ற இருவர் டாஸ்மாக் திறப்பதற்கு முன்பே அங்கு மது வாங்கி குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து விசாரித்தனர். அவர்களது பிரேதப் பரிசோதனையில் அவர்கள் சயனைடு கலந்த மதுவை குடித்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தயவு செய்து கன்னியாகுமரியைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் மதுக்கடைகளுக்கு போவதை சற்று நிறுத்துங்கள். இல்லையென்றால் சயனைடு போட்டு முடித்து விடுவார்கள். தமிழ்நாடு அரசு சயனைடு சப்ளை செய்கிறது. இதில் கவனமாக இருக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உயிர்களுக்கும் பாதுகாப்பு தரப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் உங்களிடம் உள்ள சின்ன பலவீனத்தை வைத்து உங்களை முடிக்க தமிழ்நாடு அரசாங்கம் தயங்காது” என்றார்.