தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகள், திமுக தெற்கு மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு அந்த மூன்று தொகுதிகளின் மா.செ.வாக சிவபத்மநாபனே நீடிக்கிறார். மீதமுள்ள கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் இரண்டு தொகுதிகளும் வடக்கு மாவட்டமாக பிரிக்கப்பட்டு அதன் மாவட்டப் பொறுப்பாளராக தொகுதியைச் சாராத துரை என்பவர் அன்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே வரும் தேர்தலில், வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்திருக்கிறார் துரை. வழக்கப்படி நேர்காணலிலும் பங்கேற்றுத் திரும்பியிருக்கிறார் துரை. இந்தச் சூழலில் வாசுதேவநல்லூர் தொகுதி கூட்டணி கட்சியான ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டு, அதன் வேட்பாளராக டாக்டர். சதன் திருமலைக்குமார் அறிவிக்கப்பட்டுவிட்டார்.
தொகுதி கிடைக்காமல் போனதால், கட்சிப் பணிகளிலிருந்து விலகி சைலண்ட்டாக இருந்திருக்கிறார் மாவட்டப் பொறுப்பாளர் துரை. மேலும் தொகுதியின் கூட்டணி வேட்பாளர்களான கடையநல்லூரின் சிட்டிங் எம்.எல்.ஏ. முகம்மது அபுபக்கர் மற்றும் சதன் திருமலைக்குமார் இருவரும் பொறுப்பாளர் துரையை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர். அதன் பிறகும் கட்சி தொடர்பான பணிகளில் பொறுப்பாளர் தரப்பில் தொய்வே நீடித்தது. கடைசியில் ஒருவழியாக கட்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார் துரை. இவையெல்லாம் தி.மு.க.வின் தலைமையிடமான அறிவலாயம் வரை சென்றிருக்கிறது.
இதையடுத்து, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரை முருகன் ஆகியோரது ஒப்புதலின்படி தென்காசி வடக்கு மாவட்டப் பொறுப்பாளரான துரை, அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடையநல்லூர் ஒன்றியச் செயலாளரான செல்லத்துரை வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.