Skip to main content

காவிரியில் கழிவுநீர் கலப்பு: ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ்!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

Anbumani Ramadoss


காவிரி ஆற்றில் கழிவுநீரை கலக்கவிடும் அனைத்து தொழிற்சாலைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முன்வர வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகையான தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படும் கழிவு நீர் காவிரி ஆற்றில் தொடர்ந்து கலந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அத்துமீறலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

ஈரோடு நகரத்தையொட்டிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள், சலவை ஆலைகள், அச்சு தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கவிடப்பட்டு வந்தது. இதைத் தடுக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தப்பட்ட போதும் சட்டவிரோதமாக காவிரி ஆற்றில் கழிவுகள் கலக்க விடப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால், காவிரியில் கழிவு நீர் கலப்பது முடிவுக்கு வந்தது. காவிரி ஆறும் தூய்மையடைந்தது.

ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு ஆலைகள் செயல்பட அண்மையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஆலைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரிக்க கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றனவா? என்பதை ஈரோடு மாவட்டத்திலுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் விளைவாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடை போல ஓடி காவிரி ஆற்றில் கலக்கிறது. கழிவு நீரில் அமிலம் கலந்திருப்பதால் அப்பகுதியில் கடுமையான காரநெடி வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதைத் தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
 


இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாக காவிரி போற்றப்படுகிறது. ஆனால், கள எதார்த்தம் வேறு விதமாக இருக்கிறது. காவியங்களில் காவிரி புனித நதியாகப் போற்றப்பட்டாலும், களத்தில் காவிரி சாக்கடையாக மாற்றப்பட்டு வருகிறது. பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. தமிழகத்திற்குள் வந்த பிறகு மேட்டூரிலேயே காவிரியை கழிவுநீர் கால்வாய் ஆக்கும் பணிகள் தொடங்கிவிடுகின்றன. அங்குள்ள கெம்பிளாஸ்ட் ஆலையிலிருந்து புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் போன்ற 28 வகையான நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுகின்றன. மேட்டூரில் உள்ள பிற ஆலைகள், ஈரோடு, கரூர், திருச்சி என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காவிரியில் கழிவுகள் கலக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் காவிரியில் மக்கள் புனித நீராடும் தலமாக திகழ்கிறது. ஆனால், அங்கு தான் காவிரியில் மொத்தம் 52 வகையாக நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. காவிரியில் இவ்வளவு கழிவுகள் கலந்திருப்பது விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, ஆற்றில் குளிப்பவர்களுக்கும் உடல்நலக் கேட்டை ஏற்படுத்தும். காவிரி கழிவுநீர் தொட்டியாக்கப்படுவதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. காவிரியைத் தூய்மைப்படுத்த வலியுறுத்தி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘‘கரம் கோர்ப்போம் & காவிரி காப்போம்’’ என்ற பெயரில் காவிரியைக் காக்க வலியுறுத்தி ஓகனேக்கல் முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டேன்.

அதன்பின்னர் காவிரியைத் தூய்மைப்படுத்துவதற்காக ‘‘நடந்தாய் வாழி காவேரி’’ என்ற பெயரிலான திட்டத்தைத் தமிழக அரசு, தயாரித்து மத்திய அரசின் நிதியைக் கோரியிருக்கிறது. தமிழக அரசின் இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு, காவிரியைத் தூய்மைப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். மாறாக, காவிரியை கழிவுநீர் கால்வாயாக மாற்றுவதை வேடிக்கை பார்க்கக் கூடாது. அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றில் கழிவுநீரைக் கலக்கவிடும் அனைத்து தொழிற்சாலைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் முன்வர வேண்டும்.
 

http://onelink.to/nknapp


காவிரி ஆறு 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகத் திகழ்வதால், அதைக் காக்கவும், தூய்மைப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கங்கை ஆற்றைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு நடப்பாண்டு இறுதிக்குள் மொத்தம் ரூ.20,000 கோடியைச் செலவிடவுள்ளது. அதேபோல், காவிரியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கான நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.