கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. இதனால், மதுரை அழகப்பன் நகர் முத்தப்பட்டியில் சேதமடைந்த சாலைகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று (08-11-23) பார்வையிட்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “மதுரையில் பல்வேறு சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் சீரமைக்கவில்லை. மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கி இருப்பதால் தொற்று நோய் பரவுகின்றன. மதுரை மாவட்டத்தில் அ.தி.முக. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் திமுக ஆட்சியில் கொண்டு வந்ததை போல் இப்போது திறந்து வைக்கின்றனர். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ரூ.400 கோடி செலவில் வைகை கரை சாலையை சீரமைத்தோம். ஆனால், அதனை தனது சாதனையாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
வைகை ஆற்றை சீரமைக்கவும், அதன் கரை பகுதிகளை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். மீண்டும் 2021 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் வைகை ஆற்றை தேம்ஸ் நதி போல் மாற்றி இருப்போம். கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.250 கோடி செலவில் சாலைகள் போடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். எந்தெந்த சாலைகள் போடப்பட்டிருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கையின் மூலம் தெரிவிக்க வேண்டும். திமுக ஆட்சியில், கீழிருந்து மேல்மட்டம் வரையிலும் கலெக்ஷன், கரப்சன், கமிஷன் தான். விஜய் ஆட்சியை பிடிப்பாரா? என எனக்கு தெரியாது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் ஆவார்” என்று கூறினார்.