காட்டுப் பன்றிகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்தி விவசாயத்தை காக்க வேண்டி, ம.தி.மு.க சார்பில் சட்டப் பேரவைத் தலைவரிடம் கவன ஈர்ப்புத் தீர்மானம் அளிக்கப்பட்டது.
இது குறித்து மதிமுக முதன்மை செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்திருப்பதாவது, ‘காலநிலை மாற்றத்தால் உரிய நேரத்தில் போதிய பருவ மழை இல்லாமை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற அழிவுகள், வேளாண் பொருட்களுக்கு ஒன்றிய அரசு சரியான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்காதது, விவசாய மூலப் பொருட்களின் விலை உயர்வு போன்ற பல காரணங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில், காட்டுப்பன்றிகளின் அட்டூழியம் விவசாயத்தையே முழுவதுமாக அழிக்கும் வேலையை செய்துவிடுகிறது.
பல சவால்களைத் தாண்டி பயிர் செய்து, அதைக் காப்பாற்றி அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் இந்த காட்டுப்பன்றிகளின் அட்டூழியத்தால் வெருங்கையோடு விவசாயிகள் வீடு திரும்பும் அவல நிலை தொடர்கிறது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் தொடங்கி தஞ்சை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட, சுமார் 70 விழுக்காடு மாவட்டங்களில் இந்த காட்டுப்பன்றிகளின் பெருக்கத்தால் பல ஏக்கர் விவசாய நிலங்களின் பயிர்கள் நாசமாகிறது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இது மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துவதை அறிந்து, கடந்த 20.12.2022 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரை நான் நேரில் சந்தித்து, கேரள மாநில அரசு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கி காட்டுபன்றிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொண்டதோ, அதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து காட்டுபன்றிகளை கட்டுப்படுத்திட வலியிறுத்தி கேட்டுக்கொண்டேன்.
இதன் தொடர்ச்சியாக, 09.01.2023 அன்று அன்றைய வனத்துறை அமைச்சர் மதிவேந்தனையும் நேரில் சந்தித்து இது குறித்த விரிவான மனுவை அளித்திருந்தேன். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டி அமைச்சரையும், அதிகாரிகளையும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு, கேரள மாநிலம் பின்பற்றிய நடைமுறைகளை கொண்டுவர போவதாக செய்தி கிடைக்கபெற்றேன். வனத்துறையின் சட்டமுன்வரைவை வேளாண்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாகவும் அறிகிறேன். இதுகுறித்து கடந்த மாதம் இந்திய வனப்பணி அதிகாரி ஒருவரிடம் சுமார் 30 நிமிடங்கள் அலைபேசியில் உரையாடி, அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள இந்த சட்டத்தால் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் போதிய பலன் கிடைக்கும் என்றும் தெரிந்துகொண்டேன்.
காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தி விவசாயிகளின் வேதனைகளை தீர்ப்பதற்கு உரிய சட்ட முன்வரைவை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றித் தரக்கோரி மதிமுக சார்பில் சட்டமன்றக் குழு தலைவர் டாக்டர் சதன் திருமலை குமார் மற்றும் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு. பூமிநாதன் ஆகியோர் என்னுடைய ஆலோசனையின் பேரில் இன்று பேரவை தலைவரிடம் கவன ஈர்ப்பு தீர்மான முன்னறிவிப்பை அளித்துள்ளனர். அதுகுறித்து அவையில் கேள்வி எழுப்பவும் அறிவுருத்தியுள்ளேன். தமிழ்நாடு அரசு இதற்கான உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தைக் காக்கும் எனது தொடர் முயற்சிக்கு விடையளிக்கும் என்று காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.