சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டி அளித்த ரஜினியிடம், 7 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எந்த 7 பேர் என்று ரஜினி கேட்டார். எந்த 7 பேர் என்று அவர் கேட்டதால் விமர்சனங்கள் எழுந்தன.
இதுதொடர்பாக இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் குறித்து எனக்கு தெரியாது என்ற மாயை உருவாக்கப்படுகிறது. ஏழு பேர் யார் என்று தெரியாத அளவிற்கு ரஜினிகாந்த் முட்டாள் கிடையாது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் என்று அந்த கேள்வி கேட்டப்பட்டிருந்தால் உடன் பதில் சொல்லியிருப்பேன். எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் என்று சொன்னதால் நான் புரியாமல் எந்த எழு பேர் என்று கேட்டேன். மற்றபடி, மனிதாபிமான அடிப்படையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார்.
இன்னொரு கேள்விக்கு, பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே என்றும், பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார். பாஜகவுக்கு எதிராக பலமான ஒரு கூட்டணி உருவாகிறதே என்ற கேள்விக்கு, ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என பதில் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை,
பேரறிவாளன் உள்பட 7 பேர் விவகாரம் ஊரறிந்த, நாடறிந்த விஷயம். இதுபற்றி கேட்கும்போது, உடனே தனது கருத்தை அவர் பதிவு செய்திருக்க வேண்டும். அதில் இருந்து தப்பிக்கவே எந்த 7 பேர் என்றும், இப்பத்தான் வந்தேன், கவனிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவருடைய பதில் ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை. இந்த விவகாரம் பெரியதானவுடன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும்போது யார் வேண்டுமானாலும் வரலாம் என்று வரவேற்றோம். பின்னர் ஆன்மீக அரசியல் என்றதும் பாஜகவின் இன்னொரு முகமாக இருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்தது. அவரின் அடுத்தடுத்த செயல்பாடுகள் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தன.
அரசியல் இயக்கம் தொடங்க உள்ளவர் மக்கள் பிரச்சனைகளை தொடர்ந்து கவனிப்பதாக தெரியவில்லை. அதோடு களத்திற்கு வந்து போராடக் கூடிய போராளியாகவும் தெரியவில்லை. இப்படிப்பட்ட மேம்போக்கான அரசியல்வாதிகளை, கவர்ச்சியை மட்டுமே வைத்து, அதிகாரத்தை நோக்கி நகரக்கூடியவர்களை தமிழக மக்கள் அடையாளம் காண வேண்டும். ரஜினிகாந்த் மதவாதத்தை ஆதரிப்பதாகவும், ஜனநாயக சக்திகளுக்கு விரோதமாகவும்தான் இருக்கிறார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டுகிறது என்றார்.