டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சித்தராமையா, ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தேர்தல் முடிவுகள் குறித்தும், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. மக்களவைத் தேர்தலுக்கு பின் முதல் முறையாக டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு ஆலோசனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடக்க உரையாற்றுகையில், “பாரத் ஜோடோ யாத்ரா எங்கு எல்லாம் நடைபெற்றதோ அங்கு எல்லாம் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதமும், வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மணிப்பூரில் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றோம். நாகாலாந்து, அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் வெற்றி பெற்றோம். மகாராஷ்டிராவில் நாங்கள் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தோம்.
அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளித்துள்ளனர். நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைக் காப்பாற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை அளித்து ஆதரவு அளித்ததை கண்டோம். ஒவ்வொரு மாநிலம் குறித்தும் விரைவில் தனித்தனியாக விவாதம் நடத்துவோம். அவசர சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும். மக்கள் கணிசமான நடவடிக்கைகளில் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், அதை நாம் கட்டியெழுப்ப வேண்டும். தேர்தல் முடிவை நாங்கள் உண்மையாக ஏற்றுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி காங்கிரஸ் மக்களவை குழு தலைவரை தேர்வு செய்ய இன்று (08.06.2024) மாலை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கபடலாம் எனக் கூறப்படுகிறது.