நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்த்தையும் காங்கிரஸ் கட்சி இழந்தது.காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி, தனது குடும்பத் தொகுதியான அமேதி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி ராணியிடம் தோல்வியைத் தழுவினார். இது அவரிடம் கடும் அதிருப்தியையும் விரக்தியையும் ஏற்படுத்தியது. பின்னர் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனையடுத்து சோனியா காந்தி தற்காலிக தலைவராக காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பேற்று வழிநடத்தி வந்தார். தற்போது சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய தீவிர முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது.
மேலும் கட்சியில் இருக்கும் சீனியர் தலைவர்கள் மீண்டும் ராகுல் காந்தியே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்திவருவதாக கூறுகின்றனர். இதற்கு ராகுல் காந்தியும் சோனியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்பார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தி வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்பார் என்கின்றனர். இதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி தீர்மானம் கொண்டு வர உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.