
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள விருகம்பாக்கம் சாலிகிராமம், தி. நகர், அசோக் நகர், ஆழ்வார்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட 7 இடங்களில் இன்று (06-05-25) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அசோக் நகர் ஏழாவது அவனியில் அமைந்திருக்கக் கூடிய என்சிஎஸ் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிம்டெல் என்ற நிறுவனத்திலும், என்சிஸ் டெக்னாலஜி இயக்குநர் ஏ கே நாதன் என்பவரது கோட்டபுரத்தில் இருக்கக்கூடிய அவரது வீட்டிலும், அசோக் நகர் 50வது பிரிவில் உள்ள 360 பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திலும், கோயம்பேடு ஜெயநகர் 8வது தெருவில் உள்ள எக்கோகேர் இன்ஜினியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் குணசாயன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போன்று, கே.கே நகர் மருத்துவர் ரங்கசாமி சாலை பகுதியில் அமைந்திருக்கக்கூடிய மருத்துவர் வரதராஜன் என்பவரது வீட்டிலும், விருகம்பாக்கம் காவேரி தெருவில் உள்ள பாண்டியன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய துறை சார்ந்த முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் இருந்ததால் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, விருகம்பாக்கம் காவேரி தெருவில் உள்ள பாண்டியன் வீட்டில் இன்று காலை முதல் ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற பாண்டியன், கடந்த அதிமுக ஆட்சியில் பல மடங்கு சொத்து சேர்த்ததாகக் கூறி கடந்த 2021ஆம் ஆண்டு இவரது வீடு மற்றும் இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த 2021ஆம் ஆண்டு இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சுமார் 1.37 கோடி பணமும், 3 கிலோ தங்க கட்டிகள், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள், 6 லட்சம் மதிப்புள்ள வைரம், 7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.