தமிழக பாஜக ஏற்பாடு செய்திருந்த ஈரோடு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேசினார். அவர் பேசும்போது, "தமிழகத்தில் உருவாகியிருக்கும் திமுக- காங் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணி இல்லை. அது ஒரு ஊழல் கூட்டணி. தமிழகத்தில் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறும் அளவிற்கு பா.ஜ.கட்சி வலுவான கூட்டணி அமைக்கும். ஒரு பக்கம் ஊழல் கூட்டணி உருவாகியுள்ளது.
மற்றொரு பக்கம் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் நம்முடைய கூட்டணி இருக்கிறது. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை. மத்தியில் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்திற்காக என்ன செய்துள்ளது? எதுவும் செய்யவில்லை" என கடுமையாக தாக்கினார். அமித்ஷாவின் பேச்சு தமிழக பாஜகவினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளரும் தமிழக அரசியல் நிலவரங்களை கவனித்து வருபவருமான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அவசரம் அவசரமாக தனி விமானத்தில் இன்று தமிழகம் வரவிருக்கிறார். அவர் அவசரமாக வருவதால், "தமிழகத்தில் பாஜக அமைக்கும் கூட்டணியை அமித்ஷா முன்னிலையில் அறிவிக்கக்கூடும் " என்கிற பரபரப்பு திடீரென உருவாகியிருக்கிறது.