
2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று (04.05.2025) நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று நடந்த நீட் தேர்வின் போது, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி அணிந்திருந்த ஆடையில் இருந்த பட்டன் நீக்கப்பட்ட சம்பவம், மாணவி ஒருவருக்கு வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரம், பெண்கள் அணிந்திருந்த தாலி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றிய விவகாரம், தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் என பல்வேறு சம்பவங்கள் நடந்து நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு பெற அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உதவ வேண்டும் எனத் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் பகுதியில், அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சி இன்று (05-05-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நீட் விலக்கு பெற எடப்பாடி பழனிசாமி, தமிழிசை ஆகியோர் அரசுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு வேறு பேசுவது அவர்களின் கையாலாகாத தனத்தைக் காட்டுகிறது. நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக முதல்வர் எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.