
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில், வணிகர் சங்க கோரிக்கை மாநாடு நேற்று (05-05-25) நடைபெற்றது. அந்த மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், வணிகர்களுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினருக்கான உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் உணவுப்பொருட்கள் விற்பனை, சேமித்தல் தொழில்கள் தவிர்த்து 500 சதுர அடிக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் இனி தொழில் உரிமம் வழங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி, பேரூராட்சி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடைகள், வணிக வளாக பிரச்னைகளை தீர்க்க வழிகாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் 9 சதுர மீட்டருக்கு மிகாமல் வைக்கப்படும் பெயர்ப்பலகைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தமிழ்நாடு ஒற்றை சாளர இணையதளத்தில் வர்த்தகம், சிறு வியாபாரிகளுக்கு புதிய இணையம் அமைக்கப்படும் என்றும்,
மக்கள் நலன் கருதி 24 மணி நேரமும் கடை திறக்க வழங்கப்பட்ட அரசாணை ஜூன் 4ஆம் தேதியோடு முடியும் நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “மே 5ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும். வணிகர்களாக இருக்கக்கூடிய உங்களுடைய கடைகளுக்கு ஆங்கில பெயர் வைத்திருந்தால் அதனை உடனடியாக மாற்றி தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்ற ஒரு கோரிக்கை நான் வைக்கிறேன். தனி தமிழ் சொற்களால் உங்கள் கடைகள் அடையாளப்படுத்துங்கள். ஒரு வேளை ஆங்கிலத்தில இருந்தால், ஆங்கிலத்தை தமிழாக்கம் செய்துவிட்டு வையுங்கள்” எனப் பேசினார். முன்னதாக அவர், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிதி உதவிகளையும், சிறந்த வணிகர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.