![tamimmun ansari](http://image.nakkheeran.in/cdn/farfuture/-lc4XK-zTxzOKWRwlHLSHLFz_c-N9_gDJt8MVANmFL4/1599115421/sites/default/files/inline-images/THAMIMUN%20ANSARI%20607_2.jpg)
பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகள் தடை செய்திருப்பதை வரவேற்கிறோம் என கூறியுள்ளார் நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது நாட்டின் வளரும் தலைமுறையினரின் எதிர்கால நலன் கருதி பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என கடந்த 01.07.2020 அன்று மஜக சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். நேற்று அவற்றை மத்திய் அரசு தடை செய்திருப்பதை வரவேற்கிறோம்.
பொழுதுபோக்கு என்ற பெயரில் குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் உளவியல் ரீதியாக அடிமைப்படுத்தி, அவர்களை தவறான திசையில் இந்த செயலிகள் வழிநடத்தின. இப்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதுடன், இது போன்ற அம்சங்களுடன் வேறு புதிய செயலிகளை வரவிடாமல் தடுப்பதும் மத்திய அரசின் கடமையாகும்.
இதற்கு மாற்றாக கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, கபடி போன்ற கள விளையாட்டுகளையும், நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல், கேரம் பலகை, விளையாடுதல் போன்ற இதர விளையாட்டுகளையும் தங்கள் பிள்ளைகளுக்கு ஊக்குவிக்க பெற்றோர்கள் முயல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு கூறியுள்ளார்.