தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கடலூர் பாராளுமன்றதொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்தும், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்தும் பிரசாரம் செய்தார்.
ஸ்ரீமுஷ்ணம் காமராஜ் சிலை அருகே நேற்று பிரசாரத்தில் பேசிய அவர்,
நமது கூட்டணி தமிழகம் வரவேற்கும் கூட்டணி. ஒட்டுமொத்த இளைஞர்கள், பெண்கள் ஆதரவுடன் அமோக வரவேற்பு பெற்ற கூட்டணி. இந்த கூட்டணி அமையக்கூடாது என தி.மு.க. எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தது. அவற்றை எல்லாம் முறியடித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கேப்டன் ஆகியோர் சேர்ந்து இந்த கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணி இயற்கையாக பூ, இலை, பழம் என அமைந்துள்ள கூட்டணி. இங்குநிற்கும் இந்த கூட்டத்தை பார்க்கும்போது, ஆற்றல்மிகு இளைஞர்களின் கூட்டமாக உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு கேப்டன் விஜயகாந்த் மறுத்துவிட்டு தற்போது வலுவான கூட்டணியில் சேர்ந்துள்ளார். தேனீக்கள் போல் தே.மு.தி.க. கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக செயல்பட்டு வாக்குகளை சிதறாமல் வாக்குச்சாவடிகளில் சேர்க்க வேண்டும்.
பொதுமக்களின் ஆசீர்வாதத்தால் விஜயகாந்த் தற்போது நல்ல உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார். மேலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களின் நலன் குறித்தும் எங்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார். நீங்கள் எதிர்பார்த்தபடி விஜயகாந்த் வெகுவிரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருவார். அவர் பிரசாரத்துக்கு வருகிற தேதியை கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும். இவ்வாறு பேசினார்.