மறைந்த பாமக முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் சகோதரி மீனாட்சி மற்றும் குருவின் மகன் கனலரசன் ஆகியோர் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
குருவின் சகோதரி மீனாட்சி கூறுகையில்,
அன்புமணியின் வளர்ச்சிக்கு எங்க அண்ணன் இடையூறாக இருந்தார் என்ற காரணத்திற்காகத்தான் குருவை படிப்படிபாக அழித்தார்கள். வெளியில் வராதீங்க. மீட்டிங்கில் பேசாதீங்கன்னு சொன்னாங்க. கடந்த பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது, அதற்கு தி.நகருக்கு வந்தவரை வரவேண்டாம், வந்தால் ஜாதி கட்சி என பெயர் கெட்டுபோகும். வரவேண்டாம் என்று சொன்னார்கள்.
திரும்ப வீட்டுக்கு வந்த எங்க அண்ணன், எங்க அப்பா இறந்த அன்றுகூட அழுதது கிடையாது. கண் கலங்கி இதற்கு மேல இந்த கட்சியில் நான் இருக்கணுமா என்று எங்க அக்கா தங்கச்சி நாலு பேருகிட்டேயும் கேட்டார். இதற்கு மேலேயும் இந்தக் கட்சியில் நீங்க இருக்க வேண்டாம். எங்களுக்குத் தேவை நீங்க மட்டும்தான் என்றோம். கட்சியில் இருந்து எதுவும் சம்பாதிக்கவில்லை. விவசாயம் செய்கிறோம். கஞ்ச குடிச்சாலும் கௌரவமாக வாழ்வோம் என்றோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரச்சாரத்திற்கே எங்க அண்ணன் போகவில்லை. கடைசி பத்து நாள்ல திடீரென நாலு பேர் நள்ளிரவு 12 மணிக்கு எங்க அண்ணன் காலில் விழுந்து பிரச்சாரத்திற்கு வருமாறு கெஞ்சினார்கள்.
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்லலாம் என்று அழைத்தபோது குரு மறுத்துவிட்டதாக காடுவெட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அன்புமணி கூறினாரே?
ஜெயிலில் இருந்து வந்தபோதே எங்க அண்ணனின் உடல்நிலை சரியில்லை. அந்த சமயத்தில் அன்புமணியின் மகள் திருமணத்திற்காக ரூபாய் 25 லட்சம் வேண்டும் என்ற கேட்டார்கள். என்னிடம் ஏது பணம் என்று எங்க அண்ணன் சொன்னார். வட்டிக்காவது வாங்கிக்கொடுக்குமாறு கூறினார்கள். வட்டிக்கு வாங்கி கொடுத்து நான் எப்படி வட்டி கட்டுவேன் என்று எங்க அண்ணன் சொன்னார். அதனால அவுங்களுக்கும், எங்களுக்கும் ஆறு மாதம் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்தது. அதற்கு பிறகு கல்யாணத்திற்கு பத்திரிகை வைத்தார்கள். போய்ட்டு வந்தோம். உடல்நிலை சரியில்லாமல் யாரோ ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததை வைத்து இவரே போய் ஆபரேஷன் செய்துகொண்டு வந்தார்.
மத்திய மந்திரியாக இருந்த அன்புமணி ராமதாஸ் உங்களிடம் ரூபாய் 25 லட்சம் கேட்டதாக சொல்வது நம்புகிற மாதிரி இல்லையே?
கேட்டார்கள்.
குருவின் தாயார் பேசுகையில், சிங்கப்பூரில் சிகிச்சை அளித்திருந்தால் குருவை காப்பாற்றி இருக்கலாம் என்றார்.