சட்டப்பேரவையில் யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டுமோ அது வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் குமார் அமர்வு வாசித்தது. அதில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழு செல்லும் என்றாம் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் நீக்கமும் செல்லும் என பழனிசாமி தரப்பினர் கூறி வந்தாலும் பொதுக்குழு செல்லும் என்று சொன்ன உச்சநீதிமன்றம் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சொல்லவில்லை என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.
பொதுக்குழுவின் தீர்ப்பிற்கு முன்பே ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி தரப்பினர் சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து மனு கொடுத்திருந்தனர். மேலும், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினர் வெளிநடப்பும் செய்திருந்தனர்.
இந்நிலையில் தென்காசியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் எதிர்கட்சித் துணைத்தலைவர் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “சட்டப்பேரவையில் யாரை எங்கு அமர வைக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது பேரவைத் தலைவர். அது அவரது முழு உரிமை. நாடாளுமன்றத்தில் பேரவைத் தலைவருக்கு என்ன உரிமை உள்ளதோ, அதே உரிமை எனக்கும் இருக்கிறது. அதை சட்டமன்றத்தில் பார்க்கலாம். அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பதே எங்களின் நோக்கம்” எனக் கூறியுள்ளார்.