தனது பலத்தை நிரூபிக்கவும் அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார் ஓபிஎஸ். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் ஜெயலலிதா ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமாக அதிமுகவை மாற்றினார். இந்த இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக வழிநடத்தினார். ஜெயலலிதா தான் கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என உண்மையான பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்குப் பின்னால் வந்த கபடவேடதாரிகள், அரசியல் வியாபாரிகள், வர்த்தகத்திற்காக தலைமையில் இருக்கும் நயவஞ்சகர்கள், நம்பிக்கை துரோகிகள் அதை மாற்றினர். ஜெயலலிதாவிற்கு பொதுச்செயலாளர் அந்தஸ்தை தொண்டர்கள் வழங்கினார்கள். ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட நிரந்தரப் பொதுச்செயலாளர் அந்தஸ்தை கல்நெஞ்சக்காரர்களாக ரத்து செய்துள்ளார்கள். ரத்து செய்த நயவஞ்சகர்களை ஓட ஓட விரட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை.
எனக்கு கொடுத்த பதவியை திரும்பக் கொடுத்துவிட்டேன். சசிகலா பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தார். பழனிசாமியோ சசிகலாவைப் பார்த்து நாய்கள் எதையோ பார்த்து குறைக்கிறது எனக் கூறுகிறார். எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகி. வரலாறு அவரை மன்னிக்குமா? இப்படிப்பட்ட ஆள், தனக்குத்தானே பொதுச்செயலாளராக முடிசூட்டிக் கொண்டுள்ளார். எம்ஜிஆரின் அடையாளம் தான் தொப்பியும் கண்ணாடியும். ஆனால், அதை பழனிசாமி போட்டுக்கொண்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார். எவ்வளவு பெரிய அநியாயம். எவ்வளவு பெரிய அக்கிரமம். பழனிசாமியும் எம்ஜிஆரும் ஒன்றா? அவரது கால் தூசிக்குக் கூட ஆகமாட்டார்” எனப் பேசினார்.