Skip to main content

''இதுகூட தெரியாமல் புலம்புகிறார் ஓ.பி.எஸ்''- அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

I P

 

திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற பொது நகைக்கடன் தள்ளுபடி விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கினார். கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் காந்திநாதன் வரவேற்றார். திண்டுக்கல் மேயர் இளமதி மற்றும் துணை மேயர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ''இந்தியாவே உற்றுப்பார்க்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. காரணம் தமிழகத்தில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்த முடியாத நலத்திட்டங்களை கூட்டுறவுத்துறை மூலம் தமிழக அரசு செய்து வருகிறது. விவசாயிகளுக்கு பயிர் கடன், ஏழை எளிய மக்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கியதை இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பாராட்டுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கியதை விட கூடுதலாக 1,500 கோடிக்கு மேல் நகைக் கடன் மற்றும் பயிர்க்கடன் வழங்கியது மக்களின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தான். கடந்த 5 மாத காலமாகக் கள ஆய்வு மேற்கொண்டு சரியான பயனாளிகளை தேர்வு செய்து நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் தமிழக முதல்வர் நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்ட தொகை 208 கோடி. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தள்ளுபடிக்காக ரூ.1250 கோடியை விடுவித்து சாதனை படைத்தவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருவரே.  

 

dmk

 

கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 15.5 லட்சம் பயனாளிகளில் நேற்றுவரை 11 லட்சம் பேருக்கு நகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.3,950 கோடி ஆகும். இதுவரை 70 சதவிகிதம் பேருக்கு தள்ளுபடி நகைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை பெற்று மக்களைத் தேடிச் சென்று கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கடன் உதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வங்கிக்கு வர பயப்படும் பயனாளிகளுக்கும், வங்கி வாசலே மிதிக்காத பயனாளிகளுக்குக் கடன் உதவி கிடைக்கப் போகிறது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ். தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள அ.தி.மு.க தலைவர்களின் செக் அதிகாரத்தை (காசோலை) பறித்ததாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

 

சங்கங்களில் உள்ள தலைவர்களின் பதவி காலத்தை ஐந்து வருடங்களாக அ.தி.மு.க. அரசு மாற்றி அமைத்தது. அதற்கு மத்திய அரசும் துணை போனது. ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒப்புதல் பெற்றுதான் செயல்படுத்த வேண்டும். ஆனால் இதில் அவ்வாறு செய்யவில்லை. கூட்டுறவு வங்கிகளில் சம்பளம் பெற்று பணியாற்றக்கூடிய செயலாளருக்குத்தான் செக் பவர் உள்ளது. ஒருசில சங்கங்களில் மட்டும்தான் செயலாளர்களும், தலைவர்களும் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம் உள்ளது. தலைவர்கள் வருவார்கள், போவார்கள் ஆனால் நிரந்தரமாக கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர்கள் மேலாளர்களே. இதுகூட தெரியாமல் அ.தி.மு.க. தலைவர்கள் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை பறித்ததாக ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டுள்ளார். அது முற்றிலும் தவறான அறிக்கை'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்