திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. விரைவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சட்டமன்றத் தேர்தலைப் போலவே அதிகப்பட்ச இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் முதலில் தேர்தலை நடத்தி முடிக்கலாம் என திமுக முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அப்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தால், கூட்டணி கட்சிகளுக்கு சொற்ப இடங்களே ஒதுக்கப்படும்; சில கட்சிகளுக்கு ஓரிரு இடங்கள்கூட ஒதுக்கப்படாமல் இதயத்தில் இடம் தரவும் திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க இன்று சத்தியமூர்த்திபவனில் கூட்டம் நடந்தது. மேலிட பார்வையாளர் தினேஷ்குண்டுராவ் தலைமையில் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் என பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் தலைவர் தங்கபாலு, கடந்த 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சி கூட்டணியில் நின்றும், தனித்து நின்றும் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. இருந்தாலும் கட்சி வளர்ச்சி அடையவில்லை. இனி வரும் தேர்தலில் கூட்டணி என்று பேசிக்கொண்டே போக, அப்போது மேடையில் அவரது இருக்கையில் அமர்ந்தவாறே கையால் சைகை காட்டியபடி, கூட்டணி இருக்காது; கூட்டணிதான் காங்கிரசை பலகீனமாக்குகிறது என்று சொல்ல, மேடையில் இருந்த தலைவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். மாநில தலைவரே இப்படி சொல்கிறாரே, ஏன்? என்று பலரும் அழகிரியை கேள்விக்குறியுடன் பார்த்தனர் என்கிறார்கள் ஆலோசனையில் கலந்து கொண்டவர்கள்.