சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரி முன்னிலையில் காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (08.08.2021) இரவு நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி, “தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைபவர்கள்; இவர்கள் எப்போதுமே காங்கிரஸ் கட்சிக்காரர்கள்தான். சற்று தொலைவில் இருந்தார்கள். தற்போது நெருக்கமாக வந்துள்ளார்கள். ஜி.கே. வாசன் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கமாக உள்ளதால் அதிலிருந்து விலகி தமிழகம் முழுவதும் முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக சிதம்பரத்தில் அந்தக் கட்சியிலிருந்து விலகி 300க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழக முதல்வர் 100 நாட்களில் என்ன செய்ய முடியுமோ சிறப்பாக செய்து சாதனை செய்துவருகிறார். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கும். மேகதாது அணை குறித்த அண்ணாமலையின் போராட்டம் யாரை ஏமாற்றும் வேலை. மேகதாது அணை கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தமிழகத்தில் வேளாண்மைக்கான தனி பட்ஜெட் என்பது வரவேற்கத்தக்கது. இதில் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உரிமைகளையும் நிறைவேற்றுவார்கள். வேளாண்துறை அமைச்சராக இருப்பவர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரும் ஒரு விவசாயிதான்” என்றார்.
த.மா.க.வைச் சேர்ந்த சிதம்பரம் நகரத் தலைவர் மக்கீன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஜெமினி ராதா, மாவட்ட துணைத்தலைவர் ராஜா சம்பத்குமார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், நகரத் தலைவர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.