அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் இன்று ஓ.பி.எஸ். அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்கள், “மோடியை சந்திக்க இருக்கிறீர்களா” என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓ.பி.எஸ். “வாய்ப்பு இருந்தால் சந்திப்போம்” என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள், “உங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறதா” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓ.பி.எஸ். “இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரைப் போலவே கருப்புக் கண்ணாடி குல்லா அணிந்து கொண்டு எடுத்த போட்டோக்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இக்கேள்வியை கேட்ட உடன் பன்னீர்செல்வம் குலுங்கிச் சிரித்தார். தொடர்ந்து அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “அந்த போட்டோவை பார்த்து தமிழ்நாடு மக்கள் மட்டுமல்லாமல் அடிப்படை தொண்டர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்” என்றார்.
தொடர்ந்து பதில் அளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “எம்.ஜி.ஆரை அப்படி கேலி செய்யக்கூடாது. இது குறித்து எம்.ஜி.ஆரே சொல்லியுள்ளார். யாரும் என்னைப்போல் வரக்கூடாது. அவரவர் தங்கள் இயல்புகளுக்கு ஏற்ப வளர வேண்டும் எனக் கூறியுள்ளார். இப்பொழுது சூப்பர் எம்.ஜி.ஆர் எல்லாம் வந்திருக்கக்கூடிய காலமாக இருக்கிறது. எம்ஜிஆரை இதை விட மோசமாக கேலி செய்யக்கூடியவர்கள் யாரும் இல்லை. சூப்பர் எம்.ஜி.ஆர் தன்னை எப்பொழுது முன்னிலைப்படுத்தினாரோ அன்றில் இருந்து தோல்விதான்” எனக் கூறினார்.