அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். முதலமைச்சரின் இந்த காணொளி இணையத்தில் வைரலனது.
இந்நிலையில் மதுரை வந்திருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் தொண்டர்களின் கேள்விக்கு பதில் சொல்லுவார். அதுபோல் இன்று வெளியிட்டுள்ள காணொளியில் முதலமைச்சர் எனும் வரம்பை மீறி மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
செந்தில் பாலாஜியின் கைதுக்கு பின் முதலமைச்சர் நடந்து கொள்வது முதலமைச்சரின் நடவடிக்கைகள் போல் இல்லை. முதலமைச்சரைப் பொறுத்தவரை காணொளி மூலமாக பாஜக தொண்டர்களை நேரடியாக மிரட்டியுள்ளார். நேற்று கூட பாஜக தொண்டர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்.
சிபிஐ, அமலாக்கத்துறை எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் முதலமைச்சர் பாஜகவின் தொண்டர்களை அச்சுறுத்த வேண்டும் என்று நினைத்தால் அதற்கு தான் நான் பதில் சொல்கிறேன். நாங்களும் பழைய பாஜக இல்லை. முதல்வரின் கோபம் ஊழல் செய்யும் அமைச்சரின் மீது இருக்க வேண்டும். செந்தில் பாலாஜியின் கைது காலத்தின் கட்டாயம் என முதலமைச்சருக்கு தெரியும்.
செந்தில் பாலாஜியை துன்புறுத்தியதாக மனித உரிமை ஆணையம் சொல்கிறது. திமுகவின் மோசமான செயல்பாடு என்பதே அரசுத் துறையில் அரசு வேலை செய்பவர்களை கட்சித் தொண்டர்களாக மாற்றிக்கொண்டுள்ளார்கள். அரசு வேலை செய்பவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். இ.டி.யில் இருப்பவர்கள் ஐஆர்எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள். கரூரில் ஐஆர்எஸ் அதிகாரிகளை அடித்தார்கள். தமிழகத்திற்கு பெருமை தேடி கொடுத்த தடகள வீராங்கனையையும் அடித்துள்ளார்கள். இதுவரை முதலமைச்சர் ஒரு கண்டனம் சொல்லியுள்ளாரா? எப்படி அதிகாரிகள் அமைச்சரை அடிப்பார்கள். சுற்றி 100 பேர் இருக்கிறார்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளது” என்றார்.