
அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை குறித்து சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி.
அமலாக்கத்துறை சோதனைக்கும் சில விதிமுறைகள் உள்ளது. ஆனால் அதற்கு மாறாக 20 மணி நேரம் யாரையும் சந்திக்க விடாமல் சோதனை நடத்துவது சரியா?
அமலாக்கத்துறையினரிடம் நேர்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஏனென்றால், அமலாக்கத்துறையினர் தங்களுடைய அறிவை பாஜக கட்சி அலுவலகத்தில் அடமானம் வைத்து விட்டனர். பாஜகவினர் ஊடகத்தை மிரட்டுவார்கள், நிறுவனத்தை மிரட்டுவார்கள். இவர்களிடம் எப்படி விதிமுறைகளை எதிர்பார்க்கிறீர்கள்.
மகாராஷ்டிராவில் பாஜகவின் 3 அமைச்சர்கள் மீது ஆதாரத்தோடு ஊழல் புகார் அளித்தும் அமலாக்கத்துறையினர் இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று சஞ்சய் ராவத் கூறுகிறாரே?
அமலாக்கத்துறையினர் பாஜக மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். ஏனென்றால், அமலாக்கத்துறையினர் தங்கள் கண்களில் காவித்துணியைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். உத்தரகாண்டில் முஸ்லிம்கள் யாரும் கடை திறக்கக் கூடாது, ஊரை காலி செய்ய வேண்டும் என்று கடைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு கைது நடவடிக்கையும் நடக்கவில்லை. அதே போல மணிப்பூரில் நடப்பவைகள் எதுவும் இவர்கள் கண்ணுக்கு தெரியாது. இந்த நாட்டை குட்டிச்சுவராக ஆக்கும் வகையில் பல விசயங்களை செய்து வருகிறார்கள். பிரஜ் பூஷண் மீது போக்சோ வழக்கு போட்டும் தைரியமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்.
பாஜக ஆளும் மாநிலங்களிலும் சரி ஆளாத மாநிலங்களிலும் சரி எதிர்க்கட்சியில் வலுவாக இருக்கும் இரண்டாம் கட்ட அமைச்சர் மீது நடவடக்கை எடுக்கப்படுகிறதே?
அது தான் ஆபத்தான விசயம். இந்த இரண்டு வருடங்களில் இவர்களுடைய பலத்தை காட்டாமல் தோற்றுவிட்டார்கள். அப்படி இவர்கள் எதிர்த்திருந்தால் இந்த மாதிரி அமலாக்கத்துறை சோதனை போன்ற விளையாட்டு காட்டியிருக்க மாட்டார்கள்.