Skip to main content

''இது நல்லதல்ல...'' -ராமதாஸ் எச்சரிக்கை

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்களுக்கும் நன்மை அளிக்காது. 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு என அடுத்தடுத்து பொதுத்தேர்வு எழுத வேண்டியிருக்கும் நிலையில், மாணவர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்படக்கூடும். அத்துடன் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க கட்டாயப்படுத்துவது கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது நல்லதல்ல என கூறியுள்ளார்.

 

Ramadoss



மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பே, கைவிட வேண்டும்! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், 
 

புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும், மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதுமான மத்திய அரசின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கதாகும்.

 

புதிய கல்விக் கொள்கையின் வரைவு கடந்த மே மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில்,  மாநில அரசு பள்ளிகளுக்கும் மும்மொழிக் கொள்கை நீட்டிக்கப்படும் என்றும், உள்ளூர் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் மூன்றாவது மொழியாக படிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இந்தி திணிக்கப் படாது என்றும், தேசியக் கல்விக் கொள்கை இறுதி செய்யப்படும் போது இந்தி கட்டாயப் பாடம் என்ற பரிந்துரை நீக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இப்போது தேசியக் கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டு, நாளை மறுநாள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.


 

புதிய தேசியக் கல்விக் கொள்கையின் இறுதி செய்யப்பட்ட வடிவத்தின்படி இந்தி திணிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய மும்மொழிக் கொள்கை  கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்றும், அதன்படி, மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஏதேனும் ஒரு செம்மொழியை 6&ஆம் வகுப்பு முதல் 12&ஆம் வகுப்பு வரையிலான 7 ஆண்டுகளில் ஏதேனும் 2 ஆண்டுகளுக்கு மூன்றாவது மொழியாக கற்க வேண்டும் என்றும் இறுதி செய்யப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய மும்மொழிக் கொள்கை என்பதே நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய மொழித் திணிப்பு தான். இதை ஒருபோதும் ஏற்க முடியாது.

 

இந்தியாவில் மூத்த செம்மொழி என்பது தமிழ் மொழி தான். இது தவிர சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒதியா ஆகியவையும் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிப்பது தான் மத்திய அரசின் திட்டமாகும். மூன்றாவது மொழியை ஏதேனும் இரு ஆண்டுகளுக்கு மட்டும் படித்தால் போதுமானது என்றாலும் கூட, காலப்போக்கில் மூன்றாம் மொழியை படிப்பது மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.


 

இந்தி மொழி திணிக்கப்படாது என்ற சலுகையை காட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு, மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்துவது முறையல்ல. இந்தித் திணிப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதேபோல் பிற மொழிகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது. வரைவு தேசியக் கல்விக் கொள்கையை வெளியிட்டு, அது குறித்து பொதுமக்கள், மாநில அரசுகள், கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்பதன் நோக்கமே, அவர்களின் உணர்வுகளை அறிந்து அவற்றை செயல்படுத்துவது தான். தேசியக் கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த  பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் மும்மொழிக் கொள்கை கூடாது என்றும், இருமொழிக் கொள்கையே நீடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தன. இதே கருத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அரசுக்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார்.

 

மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்களுக்கும் நன்மை அளிக்காது. 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு என அடுத்தடுத்து பொதுத்தேர்வு எழுத வேண்டியிருக்கும் நிலையில், மாணவர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்படக்கூடும். அத்துடன் மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க கட்டாயப்படுத்துவது கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது நல்லதல்ல.

 

மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான மொழிகளை கற்றுக் கொள்வது மிகவும் நல்லது. இதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. இன்னும் கேட்டால் 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில், மாணவர்கள் விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொழிகளை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இவை அனைத்துமே மாணவர்களின் விருப்பப்படி நடக்க வேண்டுமே தவிர திணிக்கப்படக் கூடாது. எனவே, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்கக் கூடாது; தமிழ்நாட்டில் இப்போதுள்ளவாறு இரு மொழிக் கொள்கையே தொடர அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்