Skip to main content

கோடி கோடியாக கையூட்டு பெற்ற அமைச்சர்கள், கேள்வி எழுப்பாமல் கையெழுத்து போட்டார்கள்: புதிய மின்சார சட்டம் குறித்து த.தே.பே. அறிக்கை

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
Electricity



புதிய மின்சார சட்டம் குறித்து தமிழ்தேசிய பேரியக்கம் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கூறியிருப்பதாவது, 
 

“கரும்பு என்னதுதான், ஆனால் உள்ள சாறு அவரது” என அரசாங்கமும் அதானியும் பங்கு போட்டுக் கொள்ளும் புதிய சட்டம் வருகிறது. கரோனா களேபரத்திற்கு இடையில் நரேந்திர மோடி அரசு முன்வைத்திருக்கிற “மின்சாரச் சட்டத்திருத்த வரைவு - 2020” என்ற புதிய சட்டத்திருத்தம் “மின்சாரக் கம்பி அரசாங்கத்திற்கு; அதில் பாயும் மின்சாரம் அதானிக்கு” என்ற வகையில் சக்கையை அரசுக்கும் சாற்றை தனியாருக்கும் வழங்க முனைகிறது. 


நடப்பில் உள்ள மின்சாரச் சட்டம் 2003க்கு திருத்தம் என்ற பெயரால் முன்வைக்கப்படும் இந்தப் புதிய சட்ட வரைவு வீடுகளுக்கும், வேளாண்மைக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மின்சாரம் கொடுப்பதையும், அதற்குக் கட்டணம் முடிவு செய்வதையும் தனியாருக்கு வழங்கும் “திருப்பணி”யை செய்கிறது.

ஏற்கெனவே இருந்த 1948 மின்சாரச் சட்டம், மின் உற்பத்தியையும், வழங்கலையும் அரசுத்துறையில் பாதுகாத்து வந்தது. உலகமயம் என்ற உலக வேட்டை மயத்தில் இந்தியா இணைந்ததற்குப் பிறகு உலக வர்த்தகக் கழகமும், பன்னாட்டு நிதியமும் வலியுறுத்தியதற்கு இணங்க 2003இல் புதிய மின்சாரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதுதான் முதன் முதலில் மின்சார உற்பத்தி (Generation), மின்சாரம் அனுப்புதல் (Transmission), மின்சாரப் பகிர்மானம் (Distribution) ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிறுவனங்கள் உருவாக வழி ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் மின்சார வாரியம் இவ்வாறு பிரிக்கப்பட்டு, “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம்” (TANGEDGO) என்ற பெயரால் ஒருங்கிணைக்கப்பட்டது. 

 

 


இது நிர்வாக முறை மாற்றம் அல்ல, மின்சாரத் துறையில் தனியார் குழுமங்களை நுழைப்பதற்கான முதல் கட்ட ஏற்பாடாக இருந்தது. அதன் பிறகு கொழுத்த இலாபம் கிடைக்கும் மின்சார உற்பத்தி தனியார் மயம் ஆனது. இந்தத் தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கி வழங்கும் நிறுவனங்களாக அரசின் மின்சார நிறுவனங்கள் மாற்றப்பட்டன. 

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் வாங்கும் மின்சாரத்திற்கு விலை நிர்ணயிப்பதில், கற்பனைக்கு எட்டாத ஊழல்கள் தலை தூக்கின. மின்சார ஊழலில் முதல் மாநிலம் மராட்டியமா, தமிழ்நாடா என்ற போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. மின்சாரக்  கட்டணம் தொடர்பாக அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நுகர்வோர் குழு நடத்திய ஒரு வழக்கில் உயர் நீதிமன்றமே இந்தக்  கேள்வியை எழுப்பியது. 

 


அந்த அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதபதி கிருபாகரன்,  “அதானி இலாபம் அடைவதற்காக அரசு நட்டம் அடைகிறதா?” என்று திறந்த நீதிமன்றத்திலேயே கேள்வி எழுப்பினார். ஏனெனில் எவ்விதப்  பொருளியல் நியாமும் இன்றி அதானி குழுமத்திடம் இருந்து வாங்கும் மின்சாரத்திற்கு ஓர் அலகு (Unit) 7 ரூபாய் என்று மிகைக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு முடிவு செய்து மின்சார வாரியப் பணத்தை அள்ளிக் கொடுத்தது. இவ்வாறு அதானியிடம் வாங்கும் ஒவ்வொரு அலகு (Unit) மின்சாரத்திற்கும் குறைந்தது இரண்டரை ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. 

தனியார் பெருங்குழும முதலாளிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே உள்ள ஒட்டுண்ணி முதலாளிய உறவு மின்சாரத்துறையில் பளிச்சென்று தெரியும். ஒவ்வொறு அலகு (Unit)  மின்சாரத்திற்கும் அமைச்சர்களுக்குக் குறைந்தது நாற்பது பைசா வெட்டுத்தொகைக் கிடைப்பதாக நீதிமன்றத்திலேயே பேசப்பட்டது. 

இப்போது இந்தப் புதிய திருத்தச் சட்டம் மின்சார வழங்கலையும் தனியார் மயமாக்கத் திட்டமிடுகிறது. அவ்வாறு செய்யும் போது மின்சாரக் கம்பி தனி, மின்சாரம் தனி என பிரிக்கிறது. மின்சாரக் கம்பி அரசுத்துறை மின்வாரியத்துடையது, அதில் வரும் மின்சாரம் மட்டும் தனியாருக்கு என்று பிரித்து வழங்குகிறது. 

 

 

 


காடு, மலை எல்லாம் திரிந்து கம்பம் நட்டு, கம்பியை போட்டு, மின்மாற்றி அமைத்து, சந்து பொந்தெல்லாம் இணைப்பை ஏற்படுத்துவது அரசுப்பணி, அதில் வரும் மின்சாரத்திற்குக் கட்டணம் வசூலித்துக் கொள்வது தனியார் நிறுவனங்கள்!

அதாவது வீட்டு முனை வரைக் கம்பியை இழுத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் பணி, அதை வீட்டில் உள்ள மின் கம்பியோடு இணைத்துக் கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பது மட்டும் தனியார் நிறுவனம் என்ற ஏற்பாடு இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் வருகிறது.

இந்தப் பகிர்மானத்திற்கு உரிமம் (லைசன்ஸ்) பெறுவோர், அதற்கு கீழ்த் துணை உரிமம் பெறுவோர், இந்த வழங்கலை ஒருங்கிணைக்கும் குத்தகைதாரர் அனைவரையும் முடிவு செய்யும் அதிகாரம் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சார ஆணையத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு உரிமம் பெறுவோர் மாநில அரசிடம் இசைவுப் பெற அவசியம் இல்லை, மாநில அரசுக்குத் தகவல் தெரிவித்தால் போதும் என்கிறது சட்டத்திருத்தம் (பிரிவு 14). இவ்வாறு உரிமம் பெறுபவர்களில் ஒரு உரிமதாரராவது அரசாங்கத் துறையாக இருக்க வேண்டும் என்று இச்சட்டத்திருத்தம் கூறுகிறது. 

 

 


இது அரசாங்கத்தையும் போட்டியாளர்களில் ஒருவராக வைப்பதற்குச் செய்யப்படும் ஏற்பாடு என சிலர் கருதலாம். ஆனால் உண்மை நோக்கம் அதுவல்ல இலாபத்தை தனியார் மயமாக்குவது, இழப்பை அரசுடமை ஆக்குவது என்பது தான் உண்மையான நோக்கம். 

இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கும் உரிமையை தனியாருக்குக் கொடுத்துவிட்டால் அவர்கள் எங்கு அதிக இலாபம் கிடைக்குமோ அங்கு மட்டும்தான் வழங்குவார்கள். கட்டணம் இல்லா மின்சாரம் மற்றும் குறைந்தக் கட்டணத்தில் மின்சாரம் பெறும் வேளாண்மைக்கோ கிராமப் புற குடிசை வீடுகளுக்கோ மின்சார வழங்கத் தனியார் நிறுவனங்கள் முன்வர மாட்டார்கள். குறைந்த அளவு மின்சார நுகர்வு உள்ளவர்களிடம் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அவ்வாறான இழப்பை சந்திக்கும் இணைப்பிற்கு அரசின் மின்சார வாரியம் செல்ல வேண்டியிருக்கும். குறைவில்லா இலாபம் தனியாருக்கு, தொடரும் இழப்பு அரசிற்கு என்ற சூதான ஏற்பாடுதான் இது.

இனி உழவர்களுக்கும் குடிசை வீடுகளுக்கும் கட்டணமில்லா மின்சாரம் வழங்குவதோ, வீடுகளுக்குச் சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதோ கூடாது என இத்திருத்தச் சட்டத்தில் புதிதாகச் சேர்க்கப் பட்டிருக்கும் பிரிவு - 62 நிபந்தனை விதிக்கிறது. 

 


கட்டணமில்லாமலோ சலுகைக் கட்டணத்திலோ மாநில அரசு மக்களுக்கு மின்சாரம் தர விரும்பினால் அதற்கு உரிய மானியத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தலாமே தவிர கட்டணச் சலுகை வழங்க முடியாது என இச்சட்டத்திருதத்தின் பல்வேறு பிரிவுகள் அழுத்திக் கூறுகின்றன, இதற்கென்று கட்டணக் கொள்கை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

 

 

இவ்வாறு உயர் அளவில் மின்சாரக் கட்டணத்தை சமன் செய்த பிறகு எந்தத் தனியார் நிறுவனம் போட்டியில் குறைந்த கட்டணம் வசூலிக்கிறார்களோ அவர்களிடம் மின்சாரம் பெறும் சந்தை வாய்ப்பு நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது என்று இதற்கு நியாயம் சொல்கிறாரகள். அதற்கு முன் எடுத்துக்காட்டாக தொலைப்பேசி துறையைக் காட்டுகிறார்கள்.  தனியார் குழுமங்களை கைப்பேசி துறையில் அனுமதித்தப் பிறகு  நுகர்வோர் தங்களுடைய எண்னை மாற்றாமலேயே தங்களுக்கு வாய்ப்புள்ள வெவ்வேறு கைப்பேசி நிறுவனங்களுக்கு இணைப்பை மாற்றிக்கொள்ள வசதி இருப்பதுபோல் மின்சாரத்துறையில் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். 

கைப்பேசி துறையில் என்ன நடந்தது என்பதை பார்க்கிறோம். இமய மலையே மூழ்கிவிடும் அளவிற்கு அந்தத் துறையில் ஊழல் நடைபெற்றதற்குக் காரணம், தனியார் குழுமங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிதான்! 

சந்தையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இலவசங்கள் வழங்கி நுழைந்த அம்பானியின் ஜியோ எல்லா அரசு வங்கிகளிலும் வாராக்கடன் வைத்துவிட்டு திவால் அறிவிப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் பல தனியார் நிறுவனங்கள் காணாமல் போயின. முகேஷ் அம்பானியின் முற்றுரிமையை நிலைநாட்ட ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற வேறுபாடு ஏதுமின்றி பல்லாயிரம் கோடி ரூபாய் கையூட்டு ஒட்டுண்ணி வலைப்பின்னல் மூலமாக கைமாறின. 


முதலில் இலவசம் என்று நுழையும் பெரிய நிறுவனம் சந்தையைக் கைப்பற்றியப் பிறகு புதிய புதிய வடிவங்களில் கட்டணம் வசூலிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  இந்த ஒட்டுண்ணி முதலாளிய வலைப்பின்னல் காரணமாக அரசுத்துறையான பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டது. 

கம்பி இல்லாமல் காற்றில் மின்காந்த அலைகள் வழியாக செயல்படும் தொலைப்பேசி துறையிலேயே இவ்வளவு சீர்கேடு என்றால், கம்பி வழியே செல்ல வேண்டிய மின்சாரம் சார்ந்த துறைகளில் எவ்வளவு கேடு நடைபெறும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மூலை முடுக்கிற்கெல்லாம் கம்பி இணைப்பைத் தரும் பணியை அரசாங்கம் செய்து இழப்பைச் சந்திக்கும், அதில் செல்லும் மின்சாரத்தைத் தனியார் நிறுவனங்கள் விற்று இலாபத்தில் கொழிக்கும். 

தொலைபேசி கட்டணம் என்றால் அது அம்பானிக்கும் ஒன்றுதான், ஐயாசாமிக்கும் ஒன்றுதான்! ஆனால் மின்சாரத்தின் நிலைமை முற்றிலும் வேறு, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் வாங்கும் மின்சாரத்தை அதற்கு ஏற்ற இலாப விலையில் அனைவருக்கும் விற்பது என்றால் உழவர்களும் ஏழை நடுத்தர மக்களும் சிறு உற்பத்தியாளர்களும் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். 

இந்தப் புதிய சட்ட ஏற்பாட்டின் படி உழவர்களுக்கும், கிராமப்புற வீடுகளுக்கும் மின்சார வழங்கும் பொறுப்பு அரசிடம் தரப்பட்டால் அந்த ஏழை மக்கள் அடிக்கடி உயர் மின் கட்டணத்தை செலுத்த முடியால் மின் துண்டிப்புக்கு ஆளாக நேரிடும். இதன் இழப்பையும் அரசின் மின்சார வாரியம்தான் ஏற்க வேண்டிவரும். ஏற்கெனவே ஆண்டிற்கு ஆண்டு இழப்பில் தத்தளித்து வரும் உழவர்கள் உற்பத்திச் செலவு கூடி தொடர்ந்து இழப்பை சந்திக்க முடியாமல் வேளாண்மையில் இருந்து வெளியேறுவது வேகம் பெறும். ஏற்கெனவே 2003 சட்டத்தின் படி தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் பெரும் தொழிற்சாலைகள் நேரடியாக மின்சாரம் பெறும் ஏற்பாடுகள் உள்ளன. 

 

 


பெரும் தொழில் நிறுவனங்களிடமும் வணிக நிறுவனங்களிடமும் சற்று கூடுதலாக கட்டணம் வசூலித்து அந்த இலாபத்தைக் கொண்டு உழவர் களுக்கும் நலிந்தப் பிரிவு மக்களுக்கும் சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் மானிய (Cross Subsidy) ஏற்பாடு நடப்பில் உள்ளது. இந்த கூடுதல் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காகவே தொழில் நிறுவனங்கள் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் நேரடியாகப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு இந்த 2003 சட்டத்தில் செய்துத் தரப்பட்டது. இதன் காரணமாக மின்சார வாரியம் பெரும் இழப்பை சந்தித்தது. இப்போது இலாபமான மின் வழங்கல் அனைத்தும் தனியாருக்கு, இழப்பு மட்டும் அரசுக்கு என்றால் மின்சாரத் துறையில் இருந்து அரசை வெளியேற்றுவது என்பதுதான் பொருள். 

ஏற்கெனவே மின்சார வாரியம் இழப்பில் இயங்கி யதைக் காரணம் காட்டிதான் மின்சார உற்பத்தி தனியார் மயமாக்கப்பட்டது. இவ்வாறு மின்சார உற்பத்தி செய்த அதானி, அம்பானி, டாடா போன்ற முற்றுரிமை குழுமங்களோ, அடுத்தநிலை தனியார் நிறுவனங்களான அப்பல்லோ, ஜே.பி. போன்ற நிறுவனங்களோ முற்றிலும் தங்கள் கை முதலீட்டை போட்டு மின் உற்பத்தி நிறுவனங்களை உருவாக்கிவிடவில்லை. மிகப் பெரும்பாலும் அரசுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்றுதான் முதலீட்டைத் திரட்டினார்கள். 
 

 

மின் உற்பத்தி தனியார் நிறுவனங்களுக்குத் தாராளமாகக் கடன் வழங்கச் சட்டங்கள் தளர்த்தப்பட்டன, வளைக்கப்பட்டன. இன்று அரசு வங்கிகளின் வாராக் கடனில் கிட்டதிட்ட 30 விழுக்காடு கடன் மின் உற்பத்தி நிறுவனங்கள் வாங்கிய கடன்தான். ஒரு புறம் மிகை இலாபத்திற்கு தங்கள் மின்சாரத்தை அரசின் மின்சார வாரியத்திற்கு விற்று கொள்ளை இலாபம் பார்த்த அதானி - அம்பானி கும்பல் தாங்கள் வாங்கிய கடன்களை வாராக் கடன்களாக மாற்றி அரசு வங்கிகளையும் நிலை குலைய வைத்தார்கள். மின்சார வாரியத்தோடு தங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மின்சார வாரியம் மின்சாரம் பெறாத காலத்திற்கும் குறைந்தபட்ச  கட்டணத் தொகையை “தக்கவைப்புக்  கட்டணம்” என்ற பெயரால் வழங்கும் வகையில், கொடுக்காத மின்சாரத்திற்கும் பணம் பெறும் ஏற்பாட்டைச் செய்து கொண்டார்கள்.
 

கோடி கோடியாக கையூட்டு பெற்ற அமைச்சர்கள் கேள்வி எழுப்பாமல் கையெழுத்துப் போட்டார்கள். இந்த ஒட்டுண்ணி வலைப்பின்னல் காரணமாக தனியார் நிறுவனங்கள் கேட்கிற விலைக்கு மின்சாரத்தை பெற்றதால், அரசு மின்சார வாரியம் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இந்த இழப்பை தந்திரமாக மாநில அரசின் தலையிலேயே  கட்டும் திட்டம்தான் “உதய்” (UDHAY) திட்டமாகும். 


இந்திய அரசு முன்வைத்த உதய் திட்டத்தை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரையில் ஏற்க மறுத்தார். ஆயினும் 2017இல் ஓ. பன்னிர் செல்வம் அரசு ஏற்றுக் கொண்டது. மின்சார வாரியத்தின் கடனுக்கான வட்டி முழுவதையும், அசல் பாதியையும் மாநில அரசு ஏற்றது. மின்சார வாரியம் மிகப்பெரிய கடன் சுமையில் இருந்து மீண்டது.

ஆனால் தொடர்ந்து நியாமற்ற இலாபத்திற்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் பெற்றதால் இழப்பு கூடிக்கொண்டே வந்தது. இன்று மின்சார வாரியம் 9,300 கோடி ரூபாய் இழப்பில் நிற்கிறது. 2003 சட்டம் மின் உற்பத்தியை தனியார் மயம் ஆக்கியதால் அரசிற்கு கூடுதல்  இழப்புதான் ஏற்பட்டதே தவிர வேறு எந்தச் சீர்திருத்தமும் நிகழ்ந்துவிடவில்லை. 

அரசமைப்புச் சட்டத்தின் படி பொதுப்பட்டியல் அதிகாரம் என்ற வகையில் மின்சாரத்துறை பெரிதும் மாநில அரசின் அதிகாரத்திலேயே இருந்தது. 2003 சட்டம் மின்சார உற்பத்தியில் தனியாரை புகுத்திய தோடு மின்சாரத் துறை அதிகாரத்தை கணிசமான அளவு மத்திய அரசிற்கு எடுத்துச் சென்றது.

கட்டணத்தை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் இந்திய அரசு அமர்த்திய ஒழுங்குமுறை ஆணையத்திற்கே இருக்குமாறு 2003 சட்டம் வரையப்பட்டது. இப்போதைய 2010 திருத்தச் சட்டம் மின்சாரத் துறை அதிகாரத்தை முற்றிலும் இந்திய அரசிடம் எடுத்துச் செல்கிறது. 
 

 

ஏற்கெனவே மின்சார ஒழுங்காற்று ஆணையம் என்ற ஏற்பாடு இருக்கும் போது இப்புதிய சட்டம் “மின்சார ஒப்பந்தச் செயல்பாட்டு வாரியம்” (Electricity Contract Enforcement Authority - ECEA) என்ற ஒன்றை உருவாக்குகிறது. 
 

மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கும், வழங்கல்  நிறுவனங்களுக்கும், வெவ்வேறு மாநில மின்சார நிறுவனங்களுக்கும் இடையே கட்டண ஒப்பந்தத்தை ஒழுங்கு செய்யும் முற்றதிகாரம் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.  அனைத்து நிலையிலும் மாநில அரசின் தலையீடு நீக்கப்படுகிறது. இதற்கென்று புதிய சட்ட வரைவில் புதிய பகுதி (PART XA) சேர்க்கப் படுகிறது. 
 

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமலேயே மாநில அரசின் கல்வி அதிகாரத்தை “தேசியக் கல்விக் கொள்கை - 2019” வழியாக  இந்திய அரசு எடுத்துச் சென்றது போலவே, மின்சாரச் சட்டத் திருத்தம் - 2020 வழியாக மாநில அரசின் மின்சார அதிகாரத்தைப் பறித்து இந்திய அரசு களவாடி செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. 
 

எனவே, மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் - மின்சார வழங்கலை தனியார் மயமாக்கும் - நுகர்வோரின் தலையில் மிகைக் கட்டணத்தைச் சுமத்தும் - வேளாண்மைக்கு வழங்கும் கட்டணமில்லா மின் சாரத்தைப் பறிக்கும் இந்த “மின்சாரத் திருத்தச் சட்டம் - 2020” முற்றிலும் எதிர்க்கப்பட வேண்டிய சட்டமாகும். இச்சட்ட வரைவை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். 
 

இத்திருத்தச் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு அரசு உடனடியாக வலியுறுத்த வேண்டும். 
 

இந்த மக்கள் பகை திருத்தச் சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும்.
 

கரோனா பதற்றத்தில் அனைத்து மக்களும் தத்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் மோடி அரசு முன்வைத்திருக்கும் மக்கள் பகை திருத்தச் சட்டம் தனித்த ஒன்றல்ல, கரோனா பதற்றம் முடிந்து பொருளியல் நெருக்கடியை சந்திக்கும் சூழலில் நரேந்திர மோடி அரசு எந்தத் திசையில் செல்லும் என்பதற்கான அபாய அறிவிப்பாகவே மின்சாரத் திருத்தச் சட்டம் அமைந்திருக்கிறது. 

மருத்துவத் துறை பெருமளவு தனியார் மயமாகிவிட்ட சூழலில், கரொனா பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற முன்வராததை பார்த்தோம். ஸ்பெயின் போன்ற நாடுகள் தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்கின. ஆனால் நரேந்திர மோடி அரசு இதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிக்கவே விரும்புகிறது என்பதற்கான சான்று இது. 

தமிழ்நாட்டு மக்கள் விழிப்படைந்து இந்த “மின்சாரத் திருத்தச் சட்டம் -2020”ஐ எதிர்த்து ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.   இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்