மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் நமச்சிவாயம், அமைச்சர் கந்தசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “வேலையில்லா திண்டாட்டம், பணப்புழக்கம் இல்லாதது, பொருளாதார வீழ்ச்சி போன்றவைகள் சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிர மாநில தேர்தல் உள்ளிட்டவைகளிலிருந்து பா.ஜ.கவின் சரிவு தொடங்கி விட்டது. புதுச்சேரியில் அரசு மக்களுக்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கையில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸை அமோக வெற்றி பெறச்செய்த மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற நினைத்தால் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கிரண்பேடி என்னும் பேய் இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தடுக்கிறது.
மேலும் காஷ்மீர் உள்நாட்டு பிரச்சினை இதில் வெளிநாடு தலையிடவேண்டாம் என்று கூறிய மத்திய அரசு, தற்போது உள்நாட்டு தலைவர்களை காஷ்மீருக்குள் அனுமதிக்காமல் ஐரோப்பிய எம்பிக்களை மட்டும் அங்கு பார்வையிட அனுமதித்திருப்பது உள்நோக்கம் கொண்டது” என குற்றம் சாற்றினார்.