பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தையடுத்த சோகனூர் பகுதியில் நடைபெற்ற மோதலில் இருவர் கொல்லப்பட்ட நிகழ்வில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்தப் பகுதிக்கு சென்று விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி ப.சிவகாமி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அறிவித்திருக்கிறது. உண்மைகளைப் புதைப்பதால் மறைத்துவிட முடியாது என்பதை உறுதிசெய்யும் வகையில், உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அரக்கோணம் நிகழ்வில் கொல்லப்பட்ட இருவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை; அவர்கள் பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்கவும் இல்லை; இந்தக் கொடிய படுகொலைகளின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழு கூறியிருக்கிறது. இதையேதான் பாட்டாளி மக்கள் கட்சியும் தொடக்கத்திலிருந்தே கூறி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை நிரூபித்துள்ளது.
உண்மை கண்டறியும் குழுவின் தலைவர் ப.சிவகாமி பாமகவுக்கு ஆதரவானவர் அல்ல. பாமக மீது பல்வேறு தருணங்களில் தெரிந்தே அவதூறுகளைப் பரப்பியவர்களில் அவரும் ஒருவர். ஆனாலும், அரக்கோணம் படுகொலைகள் தொடர்பான விசாரணையில் அறத்தின் பக்கம் நின்று உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ப.சிவகாமியின் முயற்சி வரவேற்கத்தக்கது; இது பாராட்டப்பட வேண்டியதாகும்.
அரக்கோணம் படுகொலையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எவருக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத்தான் தொடக்கம் முதலே நான் கூறி வந்தேன். ஆனால், பாமகவுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத இப்படுகொலைகளில் பாமகவை சம்பந்தப்படுத்தி சில கட்சிகள் அவதூறு பரப்பின.
தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்பதில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு அக்கறை இருந்திருந்தால், இந்த அவதூறு பரப்புரையைக் கண்டித்து இருந்திருக்க வேண்டும்; வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான ஆக்கப்பூர்வ பணிகளை செய்திருக்க வேண்டும். ஆனால், திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அதை செய்யவில்லை. மாறாக, பாமக மீதான அவதூறு பரப்புரைக்குத் துணை போயின.
அரக்கோணம் படுகொலையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என உண்மை கண்டறியும் குழு கூறிவிட்ட நிலையில், பாமக மீது அவதூறு பழிகளை சுமத்தியவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். அரசியல் லாபத்திற்காக மனசாட்சியை விற்றுவிடாதீர்கள் என்பதுதான். வட தமிழ்நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும், அவற்றின் வாயிலாக வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், பெரும்பான்மையாக வாழும் சமுதாயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். அதற்கு தடையாக இருக்கும் சக்திகளை விரட்டி அடியுங்கள். அதுதான் அறம்.” இவ்வாறு கூறியுள்ளார்.