
சேலம் அருகே பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, ஜெகநாதன் தலைவர் பதவியை இழந்தார்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. இந்த ஒன்றியக்குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் இருந்து வந்தார். இந்நிலையில், அதிமுக ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் 3 பேர் உள்பட 8 பேர் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இதையடுத்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால், ஜெகநாதன் இக்கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வெள்ளிக்கிழமை (ஜன. 21) அன்று பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கெடுப்பு நடந்து. அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த 5 கவுன்சிலர்கள், பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு கவுன்சிலர், அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் என மொத்தம் 10 பேர் வாக்களித்தனர். ஜெகநாதன் தரப்புக்கு மொத்தம் மூன்று வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இதையடுத்து, ஜெகநாதனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பெரும்பான்மை இல்லாததால் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை ஜெகநாதன் இழந்தார்.
இந்தப் பதவிக்கு விரைவில் மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. திமுகவைச் சேர்ந்த பாரப்பட்டி சுரேஷ்குமார் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.