Skip to main content

உதவியாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்..! பறிமுதல் செய்யப்பட்ட வேட்டி சேலைகள்.. பரபரக்கும் விராலிமலை..! 

Published on 28/03/2021 | Edited on 28/03/2021

 
தமிழ்நாட்டிலேயே மிகவும் பரபரப்பான தொகுதியாக உள்ளது அதிமுக வேட்பாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி. பெரும் பரபரப்புக்களுடன் பரப்புரைகள் சென்று கொண்டிருக்கிறது.

 

தேர்தல் தேதி அறிவித்த உடனேயே விராலிமலை தொகுதி வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் கொடுக்க அமைச்சரின் கல்லூரியில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் திமுக மா.செ (பொ) செல்லப்பாண்டியன் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்தார். ஆனால், அந்த புகார் கண்டுகொள்ளப்படவில்லை என அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. 

 

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் அதிமுக கரையுடன் கூடிய சேலைகள், மளிகை பொருட்கள், எந்தெந்த கிராமங்களுக்கு யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற விபரங்கள் ரூட் மேப்புடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் எழுதிய டைரியும் சிக்கியது. பிறகு அமைச்சரின் சகோதரர் உதயகுமாரின் உதவியாளரும் சுகாதார ஆய்வாளருமான விராலிமலை வீரபாண்டியன் வீட்டில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை வருமானவரித்துறை கைப்பற்றியது.

 

இதனைத் தொடர்ந்து மீண்டும் திமுக மா.செ. செல்லப்பாண்டியன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், கடந்த மாதம்  நாங்கள் கொடுத்த புகாருக்கு நீங்கள் நடவடிக்கை எடுக்காததால் தற்போது வேட்டி, சேலை பரிசுப் பொருட்கள் வழங்கி வருகிறார். அதில் சில பொருட்களை தேர்தல் பறக்கும் படையினரே கைப்பற்றி உள்ளனர். அதனால் சோதனைகள் செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

 

23ஆம் தேதி கொடுத்த புகாருக்கு 27ஆம் தேதி மாலை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் நடத்தும் இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு பொங்கல் சீர் கொடுத்துவிட்டு எஞ்சி இருந்த 650 வெண்கல பொங்கல் பானைகள் இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

 

இந்த நிலையில் இன்று நத்தம்பண்ணை ஊராட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் படம் போடப்பட்ட பரிசுப் பொருட்கள், வேட்டி, சேலைகள் கட்டுக்கட்டாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக புகார் வந்ததையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து ஊராட்சியிலேயே வைத்து பூட்டி சீல் வைத்தனர். இந்தப் பொருட்கள் தேர்தலுக்கு முன்பு நிவாரணம் கொடுக்க வந்த பொருட்கள் என்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஊராட்சியிலேயே வைக்கப்பட்டுள்ளது என்றும் ஊராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இப்படி அடுத்தடுத்து பணம், பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்படுவதால் தேர்தலை நிறுத்தி வைக்கும் திட்டம் இருக்கிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. மேலும் விராலிமலை தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்றத்தில் புதிய மனு; விஜயபாஸ்கரின் பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
ed Petition seeking details of case registered against Vijayabaskar by Anti-Corruption Department

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  அந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று முன் தினம் (21.4.2024)  விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு  தாக்கல் செய்துள்ளனர்.  அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை காரணமாகவே விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீண்டும் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறாரா அதிமுக வேட்பாளர்?

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
AIADMK candidates nominated by Vijayabaskar may also be questioned

மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் இன்று காலை முதல் மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து 3 கார்களில் வந்துள்ள ஒரு பெண் அதிகாரி உள்பட 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் விஜயபாஸ்கரின் அப்பா மற்றும் அம்மா மட்டுமே இருப்பதால் இலுப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து குவிந்துள்ள அதிமுகவினர் வீட்டின் முன்னால் நிற்கின்றனர்.

பாஜகவின் அராஜக போக்கால் இப்படி நடப்பதாக கூறும் அவரது ஆதரவாளர்கள், தேர்தலில் பதில் சொல்வோம் என்றும் கூறி வருகின்றனர். மாலை வரை சோதனை தொடரும் என்ற நிலையில் ஒரு காரில் சிலர் வெளியில் சென்றுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வெளியில் சென்ற அமலாக்கத்துறையினரின் கார் எங்கே சென்றுள்ளது என்று தேடி வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே ரைடுகளில் சிக்கி வெளியில் உள்ள கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் மாஃபியா கரிகாலனின் சகோதரர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மா.செ கருப்பையாவுடன் நெருக்கமாக உள்ள மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கு அரசு ஒப்பந்தங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார் என்பதும் இப்போது அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்கமணியை ஓரம்கட்டிவிட்டு எடப்பாடியிடம் கடுமையாக மல்லுக்கட்டி பாசறை கருப்பையாவுக்கு சீட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதேபோல மேலும் சிலருக்கு சீட்டு கிடைக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் விஜயபாஸ்கரிடம் தொடர்பில் உள்ள திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பாசறை கருப்பையா மற்றும் அவரது தம்பி கரிகாலன் வீடு, மேலும் சில வேட்பாளர்கள் வீடுகளுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலிருந்து சிக்னல் கிடைத்தால் ரைடு நிச்சயம் என்கின்றனர் துறை சார்ந்தவர்களே.