
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எதிர்ப்பு அலை கொஞ்சம்கூட இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (13.02.2025) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மக்கள்நலத் திட்டங்கள் ஒவ்வொன்றும் எல்லா குடும்பங்களையும் சென்றடைந்து இருக்கின்றது. பலன் அடையாத குடும்பமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைய ஆட்சி நடைபெறுகிறது. இதனை அண்மையில் வெளிவந்துள்ள ஆங்கில பத்திரிக்கையுடன் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேசத்தின் முறை (Mode of the nation) என்கிற கருத்துக்கணிப்பும் உணர்த்துகின்றது. கருத்துக்கணிப்புகளை நாங்கள் நம்புவது கிடையாது என்றாலும்கூட, அதற்கும் ஒரு வலிமை உண்டு எனப் பார்க்கவேண்டும்.
அந்த கருத்துக்கணிப்பிலே, இன்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தால்கூட 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெல்லும் என்று கூறப்படுகின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 47% வாக்குகளை வாங்கியிருந்த திமுக கூட்டணி 52% வாக்குகளை பெறும் என்றும்; அதிமுக 23% லிருந்து 20% ஆக குறையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கூட்டணி - 21% எனவும் கருத்துக்கணிப்பில் கூறியிருக்கிறார்கள். முதலமைச்சரின் ஆட்சிக்கு தான் ஆதரவு இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு அலைதான் வீசுகிறது. ஆட்சிக்கு எதிர்ப்பு அலை கொஞ்சம்கூட இல்லை என்பது உறுதிபடத் தெரிகின்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறார்கள். ஆனால் சிலர் எதாவது சம்பவதை குத்திக்காட்டி, அதை மிகைப்படுத்தி இந்த ஆட்சியை குறை கூறுகிறார்களே தவற, தமிழக மக்கள் இந்த ஆட்சியில் எதாவது திட்டத்தினால் பயன் அடைந்து மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள்.
இதற்கு முந்தைய ஆட்சியில் எந்த விதமான ஒரு பயனும் கிடைக்காத மாணவ, மாணவியர்கள் திராவிட மாடல் ஆட்சியில் பயன் அடைந்துவருகின்றனர். இதனால் இளைஞர்கள் அனைவரும் வரவேற்கும் ஆட்சியாகத் திராவிட மாடல் ஆட்சி விளங்குகின்றது. அதை போல் விரைவிலேயே பட்டா வழங்க கூடிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழக மக்களின் மனநிலையைப் புரிந்துக்கொண்டு, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறது. மறுபுறம் அதிமுக கலகலத்து கொண்டு இருக்கிறது என்பதை 23%லிருந்து 20% அவர்கள் வாக்கு வங்கி சரிந்து இருப்பது எடுத்துக்காட்டுகிறது. எல்லா புதிய கட்சிகள், இருக்கிற கட்சிகள் எடுத்துபார்த்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என 21%தான் வருகிறது. எங்களைப் பொறுத்தவரை 52% என்பதை இன்னும் உயர்த்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் பணிகளை மேற்கொள்வார்கள்.
நான் இரண்டு தினங்களுக்கு முன்பாக பேசும்போதே சொன்னேன், அதிமுக இபிஎஸ்-ன் கட்டுப்பாட்டில் இல்லை. அதை அங்கே இருப்பவர்கள் பேசிகொள்வதிலே தெரிந்து கொள்ளலாம். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, கட்சி தலைவர் இபிஎஸ், வேலுமணி, தங்கமணியாக இருந்தாலும், எல்லோருமே எனக்கு ஜூனியர்கள்தான் என்று சொன்னதாகத் தகவல் வந்திருக்கிறது. இதிலிருந்து அவர் எந்த அளவிற்கு ஆதங்கத்தில் இருக்கிறார் என்பதையும், அங்கு இருக்கும் சீனியர்கள் எந்தளவிற்கு ஆதங்கத்தில் இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அந்த கட்சி கலகலத்து கொண்டு இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுதான் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலிலே முதல் முறையாக இரட்டை இலைக்கு வாக்களித்து வந்தவர்கள் உதய சூரியனுக்கு வாக்களித்து இருக்கிறார்கள் என்பது உணர்ந்துகின்றது.கண்ணுக்கு தெரிந்த வரை எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா தான் சொன்னார்கள். நாங்கள் எதிரிகள் இல்லை என்று சொல்லவில்லை. எதிரிகள் இருக்கிறார்கள். அவர்களுடைய வாக்கு வங்கி குறைந்துசென்று கொண்டுள்ளது என்றுதான் சொல்கிறோம்.எதிர்கட்சிகள் அனைத்தும் வாக்கு வங்கியை சேர்ந்து வந்தாலும், எங்கள் வாக்கு வங்கியை மிஞ்ச முடியாது. அதற்கு ஏற்றால் போல் மக்கள் விரும்பும் ஆட்சியை முதலமைச்சர் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்” எனப் பேசினார்.