நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி விழுப்புரம் நகராட்சியில் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர், கோட்டகுப்பம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். முதல்வர் ஸ்டாலினின் சாதனை திட்டங்களை மக்கள் வரவேற்று வருகின்றனர். மக்கள் ஆதரவு திமுகவுக்கு அமோகமாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத அதிமுகவினர் எல்லா இடங்களிலும் வாக்குச்சாவடிகளில் பிரச்சனை செய்து வருகிறார்கள். அவர்கள் செய்யும் பிரச்சனையை திசை திருப்பி திமுக மீது வீண் பழி சுமத்துகிறார்கள். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.
இந்தநிலையில், திண்டிவனத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம், “திண்டிவனம் நகரில் உள்ள வால்டர் ஸ்காட் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி பகுதியில் திமுகவினர் அதிமுகவினரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ள திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கட்சியினருடன் ஆலோசிக்க உள்ளோம்” என்று கூறினார்.