பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து லால்குடியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி செய்யும் காலத்தில் தான் தமிழகத்தில் எந்த திட்டங்கள் வந்தாலும் லால்குடி தொகுதிக்கு நிறைவேற்றப்படும். கொள்ளிடம் பாலம், விவசாய கல்லூரியில் கலைக் கல்லூரி, மகளிருக்கான ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் கல்லூரி என பல்வேறு அடிப்படை தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, நீதிமன்ற வளாகம், நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், திருச்சி - சென்னை சாலை மற்றும் சிதம்பரம் சாலையை இணைக்கும் வகையில்புதிய இணைப்புச் சாலைகள் நடைபெற அதற்கான ஆயத்த பணியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுபோல புதிய பல்வேறு திட்டங்கள் லால்குடி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட உள்ளன. அ.தி.மு.க ஆட்சியில் பத்தாண்டுகளில் லால்குடி சட்டமன்றத் தொகுதியை அ.தி.மு.க புறக்கணித்து எந்த திட்டமும் நிறைவேற்றப்படாமல் புறக்கணித்து வந்தன. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி எப்பொழுதெல்லாம் ஆட்சி செய்கிறதோ அப்பொழுதெல்லாம் லால்குடியில் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்றி பேசினார். அதனைத் தொடர்ந்து மணக்கால், ஆங்கரை, திருமங்கலம், வாளாடி புது ரோடு, புதுக்குடி, சிறு மருதூர், மகிழம்பாடி, நெய் குப்பை, புதூர் உத்தமனூர், தச்சங்குறிச்சி பல்லபுரம், பூவாளூர் பேரூர் கழகம் உட்பட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தனர்.
வாக்கு சேகரிக்கும் போது மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, லால்குடி எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, லால்குடி நகர் மன்ற தலைவர் துணைமாணிக்கம், ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் குரு அன்பு செல்வன், புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் சுபாஷ்ராமன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.