திமுக கூட்டணி கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் களமிறங்கியுள்ளது. இதன் வேட்பாளராக மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தத்தை தலைமை அறிவித்ததின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆசி வாங்கிவிட்டு திண்டுக்கல் வந்த சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை மேள தாளங்களுடன் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதன்பின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன். முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி உட்பட கட்சி பொறுப்பாளர்களுடன் வேட்பாளர் சச்சிதானந்தன் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “எங்கள் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும். தமிழ்நாட்டு மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் இருக்கும். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகார ஆட்சி இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை வீழ்த்துவதற்கு இந்தியா என்ற கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெறும்.
திண்டுக்கல் தொகுதியில், திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி 35 ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க என்ற சமத்துவக் கொள்கையை கொண்டுள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய வெற்றியை சச்சிதானந்தம் பெறுவார். அதுவும் வாக்கு எண்ணிக்கையின் போது காலை 9 மணிக்கு எல்லாம் அதிக வாக்கு எண்ணிக்கையில் சச்சிதானந்தம் முன்னணியில் இருப்பார். அது இந்திய அளவில் பேசப்படும் அந்த அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நாங்கள் வெற்றி பெறச் செய்வோம். கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின் தேர்தல் பிரச்சாரமும் தொடங்கப்படும்” என்று கூறினார்.