ஏப்ரல்.18, வாக்குப் பதிவிற்கான நாள். அதற்கு முன்னதாக வாக்காளர்களின் மனங்கள் தெளிவாக இருப்பதற்கு ஏற்ற வகையில் ஏப்ரல் 16 அன்று மாலை 6 மணியோடு அனல் பறந்த பிரச்சாரங்களுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்துவிட்டது தேர்தல் ஆணையம். காரணம் கடந்த ஒரு மாதமாக கட்சிகளின் வேட்பாளர்களின் ஓயாத பிரச்சாரம், தொகுதி மக்களைக் கலகலக்க வைத்ததே.
இறுதிக்கட்ட பிரச்சாரம் எப்படி? இருக்கிற சக்தி முழுவதையும் திரட்டி கடைசியாக கலர்கலரான வாக்குறுதிகளுடன் வேட்பாளர்கள் தங்களின் முழக்கங்களைக் முடித்துக் கொண்டார்கள். உதாரணத்திற்கு நாம் தென்காசி பார்லிமெண்டிற்கான வேட்பாளர்களின் பிரச்சாரங்களை பின் தொடர்ந்ததில்.
அ.ம.மு.க.வின் வேட்பாளரான பொன்னுத்தாய், தென்காசியில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் என்ற முழக்கத்தோடு முடித்துக் கொண்டார்.
புதிய தமிழகம் வேட்பாளரான டாக்டர் கிருஷ்ணசாமி, அனைத்துத்தரப்பு மக்களின் நிலையை உயர்த்தக் குரல் கொடுப்பேன் என்ற வாக்குறுதியோடு சங்கரன்கோவிலில் நிறைவு செய்தார்.
செங்கோட்டைத் தொகுதியோடு தன் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை முடித்த தி.மு.கவின் தனுஷ்குமார். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்ற உறுதி மொழியோடு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.
இதே போன்றே பிற தொகுதிகளில் போட்டியிலிருக்கும் அனைத்து வேட்பாளர்களும் தவறாமல் ஏதாவதொரு வாக்குறிதியுடனேயே தங்களின் பிரச்சாரப் பயணங்களை நிறைவு செய்தனர்.
பிரச்சாரம் முடிவுக்கு வந்த அதே நேரத்தில், தொகுதிகளில் வாக்காளர்கள் கவனிப்பு பட்டுவாடாக்கள் அனைத்து வேட்பாளர்களின் தரப்புகளால் அமர்க்களப்படத் துவங்கியுள்ளன. அதனைத் தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படைகளும் அரக்கப் பறக்கின்றன.