நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டிணம் என்ற இடத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில், “வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். டாகர்.அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்கப்பட வலியுறுத்தப்படும்.
இந்திய தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். தமிழக ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது. மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.
பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்கப்படும். உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க வேண்டும். பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். இந்துத்துவ சக்திகளால் பாதிக்கபட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை விசிக மேற்கொள்ளும். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக் கூடாது.
ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆனைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம் எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் பொது மக்களும் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.