மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.
இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார்.
இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும் இந்த வழக்கு அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் சார்ந்தது என்பதால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பி.எஸ். நரசிம்ஹா, கிருஷ்ணா முராரி, எம்.ஆர். ஷா மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள்; “ஏக்நாத் ஷிண்டே அணியினர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியினராக இல்லாமல் ஒரு அணியாக செயல்பட்டு வரும் நிலையில் அவர்கள் சார்பாக சட்டமன்றத்திற்கு புதிய கொறடாவை நியமித்தது சட்ட விரோதமானது. மேலும் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் சட்டமன்ற சபாநாயகர் ஒருவர் எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அதனால், இந்த வழக்கினை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுகிறோம். உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்ததால், அவரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது” எனத் தெரிவித்தனர்.