பாஜகவின் 'மக்கள் ஆசி யாத்திரை'க்கு பொதுமக்களின் ஆசி எப்போதும் கிடைக்காது எனத் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், நக்கீரன் யூ-ட்யூப் தளத்தில் நாஞ்சில் சம்பத்தின் நேர்காணல் வெளியானது. அதில் அவர், "தமிழ்நாட்டுக்கு இடையூறாக இருப்பது டெல்லி தான் என்பது எல்லாருக்கும் தெரியும். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தரவேண்டியது என்னென்ன, தந்தது என்னென்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டது திமுக அரசு. அது மக்கள் மத்தியில் இப்போது, விவாதப் பொருளாக மாறிவிட்டது. "எங்களுக்கு வருமானமும் இல்லை; வரி போடுகிற அதிகாரமும் இல்லை எப்படி நிர்வாகத்தை நடத்துவது" எனக் கேள்வி எழுப்பினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இவ்வளவு நிதிப்பற்றாக்குறைக்கு மத்தியிலும், ஒரு பைசா கூட வரி விதிக்காமல், பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக, மக்களைத் திசைதிருப்பும் நோக்கில், 'மக்கள் ஆசி யாத்திரை'யை நடத்த திட்டமிடுகிறார்கள்.
ஆனால் பெட்ரோல், கேஸ் விலையேற்றமும் விவசாயிகளின் போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எந்த மக்களும் அவர்களுக்கு ஆசி வழங்க மாட்டார்கள்" இவ்வாறு கூறினார்.