இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதனையொட்டி அவர் இன்று, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்தார். அதன்தொடர்ச்சியாக நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் 'மத்திய அரசின் பட்ஜெட் நனைந்துபோன பட்டாசு போல இருக்கிறது' என விமர்சித்துள்ளார். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் 'மத்திய பட்ஜெட் கார்ப்பரேட்களுக்கு வெண்ணெய்யும், உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பும் வைக்கும்படி உள்ளது' என விமர்சித்துள்ளார்.