நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சூழலில் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 இடங்கள் நேற்று முன்தினம் (18.03.2024) ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகளும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்திற்கும், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கும், ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கும் தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக கட்சியின் கூட்டணி ஒப்பந்தத்திற்கு பிறகு அக்கட்சியின் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்தியில் ஆளும் ஆட்சிக்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் பெரம்பலூரில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் அணியுடன் பாஜக தொகுதிப் பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஜி.கே. வாசன், ஓபிஎஸ் கேட்கும் சில தொகுதிகளை ஒதுக்க பா.ஜ.க. முன்வராததால் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது குறித்து பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக பாஜக தேர்தல் பணிக் குழுவினரோடு அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நீண்ட ஆரோக்கியமான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. நாளை (21.03.2024) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் நல்லதொரு முடிவினை எடுத்து அதற்கான முடிவை அறிவிப்போம். நாளைக்கு நல்ல பதில் வரும்” எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். கேட்ட தேனி உள்ளிட்ட தொகுதிகளை டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும், தஞ்சாவூர் தொகுதியை த.மா.க. கேட்ட நிலையில் அந்த தொகுதியை வைத்திலிங்கம் தனது மகனுக்கு கேட்டுள்ளதாகவும் இதனால் தொகுதியை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நாளை நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.